Saturday, September 21, 2024

தமிழகத்தில் 132 டன் போதைப் பொருள் பறிமுதல்; ரூ.36 கோடி அபராதம் விதிப்பு: ஐகோர்ட்டில் அரசு தகவல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தமிழகத்தில் 132 டன் போதைப் பொருள் பறிமுதல்; ரூ.36 கோடி அபராதம் விதிப்பு: ஐகோர்ட்டில் அரசு தகவல்

மதுரை: ‘தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் போதை பொருள் விற்பனை தொடர்பாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 132 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.36 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் கைதானவர்கள் ஜாமீன் மற்றும் தலைமறைவாக இருப்பவர்கள் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கூல் லிப் போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவித்து, அதற்கு இந்தியா முழுவதும் ஏன் தடை விதிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பியதுடன், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும், கூல் லிப் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹரியாணா, கர்நாடக மாநில நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

இந்த மனுக்கள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு சார்பில், தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 9 மாதங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 132 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, கூல் லிப் போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் 2 ஆண்டுகளில் அதற்கு அடிமையாகி, அதைவிட மோசமான போதைப் பொருட்களை தேடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் இளம் தலைமுறையினர் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் பள்ளி கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் போதைப் பொருள் ஏதேனும் கிடைக்கிறதா? என தொடர்ச்சியாக ஆய்வு நடத்த வேண்டும். பள்ளிகளை சுற்றியிருக்கும் கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாகும் என தெரியவில்லை? புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என தெரிந்தே தவறு செய்பவர்கள் அதற்கான பலன்களை அனுபவிக்கட்டும். ஆனால் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமை என்றார். மத்திய, மாநில அரசுகள் தரப்பில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் கூல் லிப் உற்பத்தி நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 25-க்கு ஒத்திவைத்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024