Saturday, September 21, 2024

கணிதவியல் புத்தக வெளியீட்டு விழா

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

கணிதவியல் புத்தக வெளியீட்டு விழா

சென்னை: ‘தி மிஸ்சீஃப் ஆஃப் மேத்’ (The Mischief of Math) என்ற கணிதவியல் புத்தக வெளியீட்டு விழா சென்னை சிறுசேரியில் உள்ள சென்னை கணிதவியல் நிறுவனத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கணிதப் படிப்பு என்றாலே கடினமானதாக இருக்கும் என்ற பிம்பம் தற்போதைய மாணவர்களின் மனதில்ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஆனால்,இந்தப் புத்தகத்தில் கணிதப் பாடத்தைவெறும் எண்களால் கற்றுத் தராமல்,முக்கியப்பாடங்களை எல்லாம்குறுங்கதைகளாகத் தொகுத்துள்ளனர் மூன்று கணிதப் பேராசிரியர்கள்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலை. பேராசிரியர் பட் மிஸ்ரா,சென்னை கணிதவியல் நிறுவனமுன்னாள் மாணவர்களான பேராசிரியர்கள் இனவமசி இனகண்டி, நிவேதிதா கணேஷ் ஆகியோர் சேர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர். `வேர்ல்ட் சயின்டிஃபிக்’ பதிப்பகம் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், இளங்கலை கல்லூரி பயிலும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்தப் புத்தகத்தில்கவிதைகள், ‘காமிக்ஸ்’ கதைகள்,குறுங்கதைகள் போன்ற வடிவங்களில் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 190 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், பாடங்களுக்கு நடுவே கேள்வி-பதில் பிரிவு, கணிதச் சவால்கள்ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் நிவேதிதா பேசும்போது, “சவாலான கணிதக் கோட்பாடுகள், அல்காரிதம் முதல் செயற்கை நுண்ணறிவில் கணிதம், டிஜிட்டல் தளத்தில் போலி டேட்டா வரை, முக்கிய தலைப்புகளுக்கும், கணிதத்துக்கும் இடையே உள்ள தொடர்பை எளிமையான முறையில் விளக்கியுள்ளோம்.

எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், படங்களுடன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தினசரி வாழ்க்கையில் கணிதத்தின் பங்கு என்ன என்பதைப் பற்றிய சுவாரசியமான தகவல்களும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இப்புத்தகம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் புத்தகத்தைப் படிக்கலாம். கணிதத்தைச் சுற்றியிருக்கும் கட்டுக்கதைகள், பொய்யான தகவல்கள்ஆகியவற்றையும் பகுப்பாய்வு செய்து எழுதியிருக்கிறோம்” என்றார்.

விழாவில், சென்னை ஐஐடி முன்னாள் இயக்குநர் பேராசிரியர் எம்.எஸ்.அனந்த், சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன் வாலா, சென்னை கணிதவியல் நிறுவன இயக்குநர் மாதவன் முகுந்த்,பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024