மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 7-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்த இரு வாரங்களுக்குள் ஒரே நேரத்தில் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 51 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து நடப்பாண்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 52 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 190 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

மீனவர்களை கைது செய்வது, மீனவர்களைத் தாக்குவது, மீனவர்களின் உடமைகளைக் கொள்ளையடிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது என அனைத்து வழிகளிலும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை இலங்கை அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. அதனால், பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசின் அட்டகாசமும், அத்துமீறலும் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். இவை இனியும் தொடர இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைத்து பேச்சுகளைத் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024