நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

அம்பாசமுத்திரம்: தென் தமிழக மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் இன்று காலை 11.50 மணியளவில் பயங்கர சப்தத்துடன் நில அதிர்வை உணர்ந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கணக்கிலடங்கா கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றிலிருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளங்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இதனால் தமிழகத்தின் தென்பகுதியில் சுற்றுச் சூழல் மிகவும் பாதிக்கப்படும் சூழலும், தண்ணீர் தட்டுப்பாடு, காற்று மாசு உள்ளிட்டவை ஏற்படும் அபாயமும் உள்ளதாக சமூக ஆர்வலர்களும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் எச்சரித்து வருகின்றனர். மேலும் கல் குவாரிகளை வரைமுறைப்படுத்தி நிறுத்துவதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி வருகின்றனர்.

நாள்தோறும் மிகப்பெரிய வாகனங்களில் கனிம வளங்களைக் கொண்டு செல்வதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றன.

ஒரே நாளில் மதுக்கடைகளை மூட முடியும்: திருமாவளவன்

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (செப்.22) காலை 11.50 அளவில் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்க்களில் பெரும் சப்தத்துடன் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கடையம், சேர்வைகாரன்பட்டி, முதலியார்பட்டி, பொட்டல்புதூர், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.

பல இடங்களில் வீட்டில் உள்ள பொருள்கள் உருண்டுள்ளன. இதைப் பார்த்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் அச்சத்துடன் நின்று மிரட்சியுடன் ஒருவரிடம் ஒருவர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் ரா.முத்துராஜன் இதுகுறித்து கூறும்போது, தமிழகத்தில் வேறு எந்த மாவட்டங்களில் இல்லாத அளவிற்கு தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் கல்குவாரிகளில் அதிக அளவில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, வெடி வெடித்து பாறைகளை உடைத்து வருகின்றனர்.

இதனால் நிலத்தில் கடுமையாக அதிர்வுகள் ஏற்பட்டு குவாரிகள் அமைந்துள்ள இடங்களிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு மக்கள் வாழ முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால் இது போன்ற நில அதிர்வு தொடர்ந்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.

இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் செயலர் ஜமீன் கூறும்போது, இந்தப் பகுதியில் செயல்படும் கல்குவாரிகளில் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் அதி நவீன வெடிகளைப் பயன்படுத்தி பாறைகளை உடைத்து வருகின்றனர். தமிழகத்தில் கனிம வளத்துறை செயல்படுகிறதா என்று தெரியவில்லை.

கனிம வளத்துறை குவாரிகளில் வெடி மருந்துகள் பயன்படுத்துவதை கண்டு கொள்வதில்லை. இதுகுறித்து பலமுறை சுட்டிக் காட்டி முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளூர் தேவைக்கு பயன்படுத்துவதற்கு இந்த அளவு வெடிமருந்து பயன்படுத்தத் தேவையில்லை.

கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் அனுப்ப வேண்டியிருப்பதால் இந்த அளவு வெடிமருந்துகளைப் பயன்படுத்தும் நிலை உள்ளது என்றார்.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திர கிரி ராக்கெட் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில் குலசேகரப் பட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கல்குவாரி, மணல் குவாரி உள்ளிட்ட செயல்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024