Tuesday, September 24, 2024

தாம்பரம் சானடோரியத்தில் 6 மாதங்களாக இயங்காத நகரும் படிக்கட்டு!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

தாம்பரம் சானடோரியத்தில் 6 மாதங்களாக இயங்காத நகரும் படிக்கட்டு!

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல வசதியாக தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, ஆலந்தூர், பொத்தேரி, மறைமலை நகர் உள்ளிட்ட இடங்களில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், பாதசாரிகள் போக்குவரத்து மிகுந்த ஜிஎஸ்டி சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு எளிதாக கடந்து செல்ல முடியும்.நடை மேம்பாலத்தில் ஏறுவதற்காக சாய்வுப் பாதை, படிக்கட்டு, தானியங்கிநகரும் படிக்கட்டு இருக்கும். தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை நடை மேம்பாலங்களில் மூன்று வசதிகளும்உள்ளன. புதிதாக போடப்பட்ட மறைமலைநகர் மற்றும் பொத்தேரி நடை மேம்பாலத்தில் படிக்கட்டுகள் மட்டுமே இருக்கின்றன. ரயில் நிலையங்களிலோ, அல்லது ஜிஎஸ்டி சாலையிலோ உள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பழுதானால் சில நாட்களிலோ அதிகபட்சம் ஒரு வாரத்திலோ பழுது பார்க்கப்பட்டுவிடும்.

ஆனால், தாம்பரம் சானடோரியம் நடைமேம்பாலத்தின் இருபுறமும் உள்ள தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்து சுமார் 6 மாதங்களாக இயங்காமல் கிடக்கின்றன. மின்சார ரயில் நிலையங்களில் இருந்து இறங்கும் பயணிகள், சானடோரியம் ஜிஎஸ்டி சாலையை கடந்து பேருந்து நிலையத்துக்கு செல்லவும், அருகேயுள்ள தேசிய சித்த மருத்துவமனை, அரசு நெஞ்சக மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் இந்த நடைமேம்பாலத்தைத்தான் நம்பியுள்ளனர்.

ஜிஎஸ்டி சாலையில் சிக்னல் போடும்போது சாலை வழியாக கடந்து செல்வது மிகவும் சிரமமாக இருக்கும். தானியங்கி நகரும் படிக்கட்டுகள் பழுதடைந்து கிடப்பதால் பொதுமக்கள் சாய்வு பாதை வழியாகத்தான் நடைமேம்பாலத்தில் ஏறி மறுபுறம் கடந்து செல்கின்றனர். சாய்வு பாதையில் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கும். இதனால், வயதானவர்களும், நோயாளிகளும் தானியங்கி நகரும் படிக்கட்டு வசதி இல்லாததால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வயதான பெரியவர்கள் சாய்வு பாதையில் சென்றால் நீண்ட தூரம் நடக்க வேண்டும் என்று கருதி இயங்காமல் கிடக்கும் நகரும் படிக்கட்டில், பக்கவாட்டு பகுதியைபிடித்தவாறு மெதுவாக இறங்கி வருவதும், களைப்பு காரணமாக சிறிது நேரம் படியில் உட்கார்ந்துவிட்டு அதன்பிறகு மெதுவாக இறங்கி வரும் காட்சிகளும் பரிதாபமாக இருக்கிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலுவலர்களிடம் கேட்டபோது, "இந்த நடைமேம்பாலத்தில் பொதுமக்களின் வசதிக்காக தானியங்கி நகரும் படிக்கட்டுகள் நிறுவப்பட்டன. இவை அடிக்கடி பழுதடைவதால் புதிதாக மாற்றியமைக்க முடிவுசெய்துள்ளோம். இதற்கான அளவீட்டு பணிகள் முடிவடைந்துவிட்டன. விரைவில் புதிய நகரும்படிக்கட்டுகள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்" என்று தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024