ரேணுகாசாமி கொலை வழக்கு – நடிகர் தர்ஷனுக்கு சப்-இன்ஸ்பெக்டர் உதவி செய்தாரா?

by rajtamil
0 comment 24 views
A+A-
Reset

ரேணுகாசாமியின் உடலை மறைக்க போலீஸ் அதிகாரி ஒருவர் உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். நடிகர் தர்ஷனின் தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலமாக ஆபாச குறுந்தகவல், புகைப்படம் அனுப்பி தொல்லை கொடுத்திருந்தார்.

தனது தோழிக்கு தொல்லை கொடுத்ததால், அவரை பெங்களூருவுக்கு கடத்தி வந்து பட்டணகெரேயில் உள்ள கார்கள் நிறுத்தும் ஷெட்டில் அடைத்துவைத்து சித்ரவதை செய்து கொலை செய்ததுடன், உடலை சாக்கடை கால்வாயில் வீசி இருந்தார்கள். இதுகுறித்து அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக ஒட்டு மொத்தமாக 17 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. முதல் குற்றவாளியாக பவித்ரா கவுடாவும், 2-வது குற்றவாளியாக நடிகர் தர்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதில், பிரதோஷ் என்பவரை அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர். இவர், நடிகர் தர்ஷனின் நண்பர் ஆவார். பிரதோசின் பெயரில் உள்ள காரில்தான் கொலையான ரேணுகாசாமியின் உடலை எடுத்துச் சென்று கால்வாயில் வீசியுள்ளனர். அந்த காரை ஏற்கனவே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ரசிகர் ரேணுகாசாமியின் கொலை குறித்து நேற்று 3-வது நாளாக நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை பவித்ரா கவுடாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில், நேற்று முன்தினம் கொலை நடந்த பட்டணகெரே கார் ஷெட்டுக்கு நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடாவை அழைத்து சென்று விசாரித்தபோது இரும்பு கம்பி, உருட்டு கட்டை, பெல்ட் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய சில பொருட்கள் போலீசாருக்கு கிடைத்திருந்தன. அவற்றை தடய அறிவியல் ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், ரேணுகாசாமியின் உடலை மறைக்க நடிகர் தர்ஷன், அவரது கூட்டாளிகள் முயன்றபோது, அதற்கு ஒரு போலீஸ் அதிகாரி உதவி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கடந்த 8-ந் தேதி ரேணுகாசாமியை மதியத்தில் இருந்து இரவு வரை தொடர்ந்து தாக்கியதால், அவர் உயிர் இழந்திருந்தார். இதையடுத்து, அவரது உடலை என்ன செய்வது என்று தெரியாமல் நடிகர் தர்ஷன், கூட்டாளிகள் விழி பிதுங்கி உள்ளனர். அப்போது பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவரிடம், ரேணுகாசாமி கொலை பற்றியும், அவரது உடலை என்ன செய்யலாம் என்பது பற்றியும் கூறி உதவி கேட்டுள்ளனர்.

இதற்கு அந்த சப்-இன்ஸ்பெக்டர், தங்களது போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உடலை போட வேண்டாம், காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உடலை வீசும்படி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து ரேணுகாசாமி கொலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Original Article

You may also like

© RajTamil Network – 2024