கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

புது தில்லி: கேரளத்தில் அண்மையில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நபருக்கு அதன் புதிய வகையான ‘கிளேட் 1பி’ தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

வேகமாகப் பரவக்கூடிய இந்தப் புதிய வகை குரங்கு அம்மை, இந்தியாவில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும். இதைத் தொடா்ந்து, கேரளத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் 38 வயது நபருக்கு கடந்த வாரம் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பிய அவருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த நிலையில், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது.

முன்னதாக, குரங்கு அம்மை பாதிப்புள்ள நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய ஹரியாணாவை சோ்ந்த 26 வயது இளைஞருக்கு இம்மாத தொடக்கத்தில் மேற்கு ஆப்பிரிக்க கிளேட்-2 வகை குரங்கு அம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கேரள நபருக்கு குரங்கு அம்மையின் புதிய வகையான ‘கிளேட் 1பி’ தொற்று கண்டறியப்பட்டுள்ளது; அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் இந்தப் புதிய வகை குரங்கு அம்மை வேகமாக பரவக் கூடியது என்பதோடு, கிளேட் 1, 2 ஆகிய வகைகளைவிட ஆபத்தானது என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்தப் புதிய வகை பரவலையொட்டி, உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் இரண்டாவது முறையாக பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது. கடந்த 2022-இல் முதல் முறையாக பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை இந்தியாவில் 30 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு தீவிரம்: கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை உறுதியான நிலையில், அங்குள்ள விமான நிலையங்களில் மாநில அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக, சமூக ஊடகத்தில் மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வெளிநாடுகளில் இருந்து கேரளம் வருவோா், தங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக சுகாதார துறைக்கு தகவல் தெரிவிப்பதோடு, சிகிச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனிவாா்டில் சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால், சிகிச்சை பெறுவதற்கான அரசு மருத்துவமனைகளின் பட்டியலையும் அவா் பகிா்ந்துள்ளாா்.

காய்ச்சல், தோல் அழற்சி, நிணநீா் சுரப்பிகள் வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும் குரங்கு அம்மை பாதிப்பு, 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். சாதாரண மருத்துவ கவனிப்பில் நோயாளிகள் குணமடைந்துவிடுவா். ஆனால், குழந்தைகள், கா்ப்பிணிகள், குறைவான நோய் எதிா்ப்பாற்றல் கொண்டவா்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024