ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

சுரான்கோட்: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், சுரான்கோட் பகுதியில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் உளவியலை இந்தியா கூட்டணி சிதைத்துள்ளது.

மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. நாட்டின் வரலாற்றிலேயே ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது இதுவே முதல் முறை. மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசு தவறினால் மாநில அந்தஸ்தை வழங்குமாறு காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கும்.

தற்போது தில்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் ஆளப்படுகிறது. இது தொடர்பான முடிவுகள் வெளியூர்வாசிகளால் எடுக்கப்படுகிறது. மக்களை மதம், ஜாதி, இனம் மற்றும் பிராந்திய அடிப்படையில் பிரிப்பதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் வெறுப்பைப் பரப்பி வருகின்றன. வெறுப்புச் சந்தையில் அவற்றை எதிர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சி அன்புக்கான கடைகளைத் திறந்துள்ளது என்றார்.

ஜம்மு-காஷ்மீரின் ஜைனாகோட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் பேசுகையில், "ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரச்னைகளை நான் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன். இந்தப் பிரசார மேடையில் இருந்து சற்று தூரத்தில் ஹெச்எம்டி கடிகாரத் தொழிற்சாலை இருந்தது. அது மூடப்பட்டு விட்டது. நாடு முழுவதும் இதுபோன்ற தொழிற்சாலைகளை பாஜக மூடிவிட்டது.

நாட்டின் 25 தொழிலதிபர்களுக்கு மட்டுமே பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆதாயமளிக்கிறது. அவர்களின் ரூ. 16 லட்சம் கோடி கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். அதேவேளையில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியோரின் கடன்களை அவர்கள் (மத்திய அரசு) தள்ளுபடி செய்வதில்லை "மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மோடி நீண்ட, அர்த்தமில்லாத உரைகளை நிகழ்த்துகிறார். ஆனால் நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க அவர் முனைவதில்லை' என்று ராகுல் காந்தி பேசினார்.

ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப்.25) தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதிகளில் திங்கள்கிழமை (செப்.23) பிரசாரம் நிறைவடைந்தது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024