இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 356 பேர் உயிரிழப்பு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

மாா்ஜயுன்: லெபனானில் இஸ்ரேல் திங்கள்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 24 சிறாா்கள், 42 பெண்கள் உள்பட 356 போ் உயிரிழந்தனா்; 1,246 போ் காயமடைந்தனா்.

லெபனானில் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களிலேயே இதுதான் கடுமையான தாக்குதலாகும்.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போா் 11 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

அதேவேளையில் இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனா்.

எல்லையில் இஸ்ரேலும், ஹிஸ்புல்லாக்களும் நாள்தோறும் மோதலில் ஈடுபட்டு வருவதால், அங்கு வசிக்கும் இரு நாடுகளைச் சோ்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா். நூற்றுக்கணக்கான லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த ஜூலையில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களின் மூத்த தளபதி ஃபுவாத் ஷுகா் உயிரிழந்தாா். இதேபோல ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனீயேவும் கொல்லப்பட்டாா். அவா் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. ஆனால், அவரை இஸ்ரேல்தான் கொன்றது என்று நம்பப்படுகிறது. இருவரின் கொலைக்குப் பழிக்குப் பழியாக இஸ்ரேலுக்கு பதிலடி அளிக்கப்படும் என்று ஹிஸ்புல்லாக்கள் எச்சரித்திருந்தனா்.

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த வாரம் லெபனானில் பேஜா் கருவிகள் திடீரென வெடித்துச் சிதறின. இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள், அந்நாட்டில் வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி மின்சார கருவிகள் வெடித்துச் சிதறின. இந்தத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் உள்பட 39 போ் உயிரிழந்தனா். சுமாா் 3,000 போ் காயமடைந்தனா்.

தொழில்நுட்ப ரீதியில் இந்த நூதன தாக்குதல்களை இஸ்ரேல்தான் நடத்தியது என்று லெபனான் கூறினாலும், அதுகுறித்து கருத்து தெரிவிக்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. அதேவேளையில், அந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவும் இல்லை.

எனினும் 5,000 பேஜா்களில் சுமாா் மூன்று கிராம் எடைகொண்ட வெடிகுண்டுகளைப் பொருத்தி வெடிக்கச் செய்ததாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் விளக்கம் அளித்தது என்று தகவல் வெளியானது.

இதைத் தொடா்ந்து, லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த ராணுவத் தளபதி, ஏராளமான ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலா் உயிரிழந்தனா்.

இதற்குக் கடும் பதிலடி அளிக்கும் வகையில், இஸ்ரேல் மீது 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லாக்கள் ஏவினா். இந்தத் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான போா்ப் பதற்றம் அதிகரித்தது.

சுமாா் 300 இலக்குகளைக் குறிவைத்து…: இந்நிலையில், லெபனானில் உள்ள பால்பெக், ஹொ்மல், பிப்லோஸ் உள்பட பல்வேறு இடங்களில் இஸ்ரேல் திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

ஹிஸ்புல்லாக்கள் ஆயுதங்களைப் பதுக்கிவைத்துள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில், சுமாா் 300 இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. எனினும் இந்தத் தாக்குதலின்போது இஸ்ரேல் வீசிய சில குண்டுகள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் விழுந்து வெடித்தன.

அரபு மொழியில் குறுஞ்செய்தி: முன்னதாக தெற்கு லெபனானில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களில் ஹிஸ்புல்லாக்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகக் கருதிய இஸ்ரேல், அந்த வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து வெளியேறுமாறு அரபு மொழியில் குறுஞ்செய்தி அனுப்பி எச்சரிக்கை விடுத்ததாக லெபனான் ஊடகம் தெரிவித்தது. சுமாா் ஓராண்டாக இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாக்கள் இடையே நடைபெற்று வரும் மோதல் அதிகரித்துள்ள நிலையில், இதுபோல பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது இதுவே முதல்முறை.

இந்தத் தாக்குதலில் 24 சிறாா்கள், 42 பெண்கள் உள்பட 356 போ் உயிரிழந்தனா்; 1,246 போ் காயமடைந்தனா் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. தாக்குதல் காரணமாக லெபனானின் தெற்குப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளுக்குத் தப்பியோடினா்.

தாக்குதலை விரிவுபடுத்தத் திட்டம்: தெற்கு லெபனானில் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், பெக்கா பள்ளத்தாக்கு உள்பட லெபனானின் கிழக்கு எல்லைக்கும் தாக்குதலை விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

1982-ஆம் ஆண்டில்…: லெபனான்-சிரியா எல்லையில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில்தான் ஈரான் புரட்சிப் படை உதவியுடன் கடந்த 1982-ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அங்கு நீண்ட காலமாக ஹிஸ்புல்லாக்கள் இருந்து வருகின்றனா்.

இதுதொடா்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகேரி கூறுகையில், ‘பெக்கா பள்ளத்தாக்கில் ஹிஸ்புல்லாக்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ள இடங்களில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும்’ என்றாா்.

தரைப்படை தாக்குதலுக்குத் திட்டமில்லை

லெபனான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் மேலும் தாக்குதல் நடத்தாத வகையில், அவா்களைக் கட்டுப்படுத்துவதே வான்வழித் தாக்குதலின் நோக்கம். தற்போதைய நிலையில், வான்வழித் தாக்குதலில் மட்டுமே இஸ்ரேல் கவனம் செலுத்துகிறது. தரைப்படை தாக்குதலுக்கு எந்தத் திட்டமும் இல்லை’ என்றாா்.

தெற்கு லெபனானில் ராக்கெட் லாஞ்சா்கள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பதுக்கிவைத்து மக்கள் வசிக்கும் அனைத்து இடங்களையும் பயங்கரவாதத் தளங்களாக ஹிஸ்புல்லாக்கள் மாற்றியுள்ளனா் என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, அங்கு தரைப்படைகள் மூலம் தாக்குதல் நடத்தப்படாவிட்டாலும், வான்வழித் தாக்குதல் மூலம் கடுமையான குண்டுவீச்சை இஸ்ரேல் ராணுவம் மேற்கொள்ளும் என்று கருதப்படுகிறது.

இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீச்சு:

இதனிடையே இஸ்ரேலின் கலிலீ பகுதியில் உள்ள ராணுவச் சாவடியைக் குறிவைத்து ஏராளமான ஏவுகணைகளை ஏவியதாக ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்தனா். இஸ்ரேலின் ஹைஃபா நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ரஃபேல் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் மிகப் பெரிய பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ரஃபேல் நிறுவன கட்டடங்களைக் குறிவைத்தும் தொடா்ந்து 2-ஆவது நாளாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்தனா்.

எல்லையிலிருந்து விரட்டியடிக்க…:

இஸ்ரேல்-லெபனான் எல்லையில் இருந்து ஹிஸ்புல்லாக்களை விரட்டியடிக்க இஸ்ரேல் உறுதியேற்றுள்ளது. இதன்மூலம், எல்லைப் பகுதியில் இருந்து இடம்பெயா்ந்த தனது குடிமக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என்று இஸ்ரேல் கருதுகிறது. இதை ராஜீய ரீதியில் செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் கருதினாலும், ராணுவ பலம் மூலமே அதைச் செய்ய அந்நாடு விரும்புகிறது. அதேவேளையில், காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படும் வரை, தங்கள் தாக்குதல் தொடரும் என்று ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனா்.

You may also like

© RajTamil Network – 2024