Wednesday, September 25, 2024

திருடனாக முன்னிறுத்த முயற்சித்தது பா.ஜ.க.; நான் ஊழலற்றவன் என எதிரியும் கூறுவான்: கெஜ்ரிவால்

by rajtamil
Published: Updated: 0 comment 0 views
A+A-
Reset

சண்டிகார்,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தில், முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 12-ந்தேதி ஜாமீன் வழங்கியது. சி.பி.ஐ. அமைப்பு பதிவு செய்த வழக்கில், கெஜ்ரிவாலுக்கு கடந்த 13-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கெஜ்ரிவாலை சுப்ரீம் கோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது. திகார் சிறையில் இருந்து வெளிவந்ததும் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி அறிவிக்கப்பட்டார். அவர் முறைப்படி கடந்த 21-ந்தேதி பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், அரியானாவில் அக்டோபர் 5-ந்தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் ரானியா தொகுதிக்கான வேட்பாளராக ஹர்பீந்தர் சிங் அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு ஆதரவாக டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக நடந்த வாகன பேரணியை தொடர்ந்து அவர் கூட்டத்தின் முன் பேசும்போது, எந்தவித காரணமுமின்றி ஐந்தரை மாதங்கள் சிறையில் கழித்தேன். என்னுடைய தவறு என்ன? 10 ஆண்டுகளாக டெல்லி முதல்-மந்திரியாக இருந்ததே என்னுடைய தவறு. ஏழை குழந்தைகளுக்கு நல்ல அரசு பள்ளிகளை அமைத்தேன்.

டெல்லியின் முன்பு 7 முதல் 8 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 24 மணிநேரமும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. டெல்லி மற்றும் பஞ்சாப்பில் இலவச மின்சாரம் வழங்கியது என்னுடைய தவறு என்று பேசியுள்ளார்.

முதியவர்களுக்காக யாத்திரையை தொடங்கியது என்னுடைய தவறு. டெல்லி மற்றும் பஞ்சாப்பில் நிறைய பணிகள் நடந்துள்ளன. எந்தவொரு ஊழல்வாதியும் இதனை செய்யமாட்டான் என்றார்.

டெல்லியில் இலவச மின்சாரத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி என்ற பெரிய தொகை செலவானது. இதனை குறிப்பிட்ட கெஜ்ரிவால், நானொரு திருடனாக இருந்திருந்தேன் என்றால், ரூ.3 ஆயிரம் கோடியை என்னுடைய சட்டைப்பையில் போட்டுக்கொண்டு போயிருப்பேன்.

ஏழை குழந்தைகளுக்கு நல்ல அரசு பள்ளிகளை அமைத்தேன். அதற்கான தொகையை என்னுடைய பையில் போட்டு, கொண்டு சென்றிருக்க முடியும் என்றார். அவர் தொடர்ந்து பா.ஜ.க.வை சாடி பேசும்போது, அக்கட்சி அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக விலையுடன் மின்சாரம் உள்ளது என கூறினார்.

அரியானாவில் இலவச மின்சாரம் இல்லை. அது விலை அதிகம். நான் உங்களிடம், யார் திருடன்? என கேட்க விரும்புகிறேன். இலவச மின்சாரம் வழங்குபவரா? அல்லது மின்சாரம் விலையுயர்ந்தது என உருவாக்கி வைத்திருப்பவரா? என கேட்டுள்ளார்.

நான் நேர்மையானவன். ஏன் என்னை சிறையில் அடைத்தனர்? என கேட்டுள்ள அவர், கெஜ்ரிவால் ஒரு திருடன் என கூற அவர்கள் விரும்பினர். ஆனால், சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்ததும், அவர் ஒரு திருடன் என ஏற்று கொள்ள ஒருவரும் தயாராக இல்லை. என்னுடைய கொடூர எதிரி கூட, கெஜ்ரிவால் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால், ஊழல்வாதியாக இருக்க முடியாது என கூறுவான் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

என்னை உடல், மனதளவில் உடைந்து போக செய்ய முயற்சித்தனர். ஆனால், நான் அரியானாவில் இருந்து வந்தவன் என அவர்களுக்கு தெரியாது. அரியானாவை சேர்ந்தவனின் உறுதியை உங்களால் உடைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024