Saturday, September 21, 2024

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு – அனைவரும் விடுதலை

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

சொத்து பிரச்சினை தொடர்பாக மருத்துவர் சுப்பையா கடந்த 2013-ம் ஆண்டு கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக இந்த கொலை அரங்கேறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், அவர்களது மகன்கள் வக்கீல் பாசில், என்ஜினீயர் போரிஸ், பாசிலின் நண்பர்களான வக்கீல் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வப்பிரகாஷ், அய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம், வழக்கு தொடர்பான விபரங்களை சென்னை ஐகோர்ட்டிற்கு அனுப்பிவைத்தது. இதேபோல, ஏழு பேரும் மரண தண்டனையை எதிர்த்தும் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024