Saturday, September 21, 2024

நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: 24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் – காங்கிரஸ் அறிவிப்பு

by rajtamil
0 comment 33 views
A+A-
Reset

புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய், டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 4-ந் தேதி வெளியிட்டது மர்மமாக உள்ளது. தேர்தல் முடிவுகளில் எல்லோரும் மூழ்கி இருப்பார்கள் என்பதால், நீட் தேர்வு முறைகேடு பற்றிய விவாதத்தை தவிர்ப்பதற்காக அந்த நாளில் வெளியிட்டுள்ளனர்.

பயிற்சி மையங்களின் வாக்குறுதிகளை நம்பி சாதாரண குடும்பங்கள் ரூ.30 லட்சம்வரை செலவழித்துள்ளன. தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கால அறிவுரை சொல்லும் பிரதமர் மோடி, நீட் தேர்வு மாணவர்களின் மனஉளைச்சலை மறக்கக்கூடாது.

நீட் தேர்வு ஊழல் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்போதைய தேசிய தேர்வு முகமை தலைவர் தலைமையில் நேர்மையான விசாரணை நடக்காது. ஆகவே, அவரை நீக்க வேண்டும்.

ஆனால், விசாரணை தொடர்பான காங்கிரசின் கோரிக்கையை பா.ஜனதா அணுகும் விதம் பொறுப்பற்றதாக இருக்கிறது. பிரச்சினையில் இருந்து மத்திய அரசு தப்பி ஓடுகிறது. பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். பதவியேற்பு விழாக்களில் பங்கேற்பதிலும், வெளிநாட்டு பயணத்திலும் தீவிரமாக இருக்கிறார்.

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானும், வினாத்தாள் கசியவில்லை என்று மறுக்கிறார்.

ஆனால், 'இந்தியா' கூட்டணி, நீட் தேர்வு மாணவர்களின் பிரச்சினையை கையில் எடுக்கும். அது எங்கள் கடமை. நாடு முழுவதும் நிலவும் கோபம், நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும். 24 லட்சம் மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் சத்தமாக எழுப்புவோம்.

மத்திய அரசை பணிய வைக்கும் அளவுக்கு இந்தியா கூட்டணிக்கு பலம் உள்ளது. மத்திய அரசை பொறுப்பேற்க செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் மட்டுமே பிரச்சினை அல்ல. முறைகேடு, ஊழல், வினாத்தாள் கசிவு ஆகியவை நடந்துள்ளன.

தேர்வு மையங்களுக்கும், பயிற்சி மையங்களுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. 'பணம் கொடு, வினாத்தாள் வாங்கிக்கொள்' என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

எனவே, ஒட்டுமொத்த ஊழல் பற்றியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மோடி அரசு சம்மதிக்காவிட்டால், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் நேர்மையான விசாரணை நடத்தக் கோருவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024