சென்னையில் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

திருச்சி-சென்னை விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.

சென்னை,

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சென்ட்ரல், நுங்கம்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், மயிலாப்பூர், வடபழனி, கோயம்பேடு, கே.கே.நகர், அண்ணா நகர், தியாகராய நகர், திருவெற்றியூர், எண்ணூர், புதுவண்ணாரப்பேட்டை, மணலி, வண்ணாரப்பேட்டை, காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெயதது.

புறநகர் பகுதிகளான தாம்பரம், குன்றத்தூர், பொன்னேரி பூந்தமல்லி, நசரத்பேட்டை, கரையான்சாவடி, மாங்காடு, திருவேற்காடு, அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், வேலப்பன்சாவடி, திருமழிசை, செம்பரம்பாக்கம், குமணன்சாவடி, குன்றத்தூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஆவடி, அம்பத்தூரில் 13 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வானகரம், மணலியில் 12 சென்டி மீட்டரும், அண்ணாநகரில் 11 சென்டி மீட்டரும் மழை கொட்டியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பை, விஜயவாடா, புவனேஸ்வர், கோழிக்கோடு, திருச்சியில் இருந்து சென்னை வந்த 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானத்தில் வட்டமடித்தன. நீண்ட நேர தாமதத்திற்கு பின் விமானங்கள் தரையிறங்கின.

சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, ஐதராபாத், கொச்சி, கோவை, கொல்கத்தா, இந்தூர் செல்லும் உள்நாட்டு விமானங்கள் தாமதமாகின. அதைபோல சென்னையில் இருந்து சிங்கப்பூர், அபுதாபி, கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாக சென்றன.

கனமழை காரணமாக திருச்சி-சென்னை விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மழை நின்ற பிறகு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

© RajTamil Network – 2024