Saturday, September 21, 2024

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

புதுடெல்லி,

நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும், தேர்தல் செலவு அதிகரிப்பதாகவும் அவர் கருதுகிறார்.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு கடந்த மார்ச் 15-ந் தேதி தனது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தது. முதல்கட்டமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திவிட்டு, அடுத்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துமாறு அக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையை விரைவில் மத்திய மந்திரிசபையின் பரிசீலனைக்கு முன்வைக்க மத்திய சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.இத்தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முடிவு, மத்திய சட்ட அமைச்சகத்தின் சட்டம் இயற்றும் துறையின் 100 நாள் செயல்திட்டங்களில் ஒன்றாகும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, அனைத்து மத்திய மந்திரிகளையும், புதிய அரசின் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்களை வகுக்குமாறு பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி, ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையை மந்திரிசபை பரிசீலனைக்கு முன்வைப்பதை சட்ட அமைச்சகம் தனது 100 நாள் செயல்திட்டங்களில் சேர்த்திருந்தது.

உள்ளாட்சி தேர்தலுக்கு தனி வாக்காளர் பட்டியல் இருப்பதை மாற்றி, அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியலையும், வாக்காளர் அட்டையையும் தயாரிக்குமாறு ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்த 18 அரசியல் சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்றும், அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு மாநில சட்டசபைகளின் ஒப்புதல் தேவையில்லை என்றும் அக்குழு கூறியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024