நெய் என நாம் சாப்பிடுவது எல்லாம் நெய்தானா?

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

திருப்பதியில் லட்டு செய்வதற்காகத் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட நெய்யில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாடே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், கடைகளில் வாங்கி நாம் பயன்படுத்தும் நெய் எல்லாம் உண்மையில் நெய்தானா? நன்றாகத் தெரியுமா?

நெய், நெய் என்றால் எல்லாம் நெய்யாமோ?

நெடுங்கால அநுபவஸ்தர்கள் நாடுகளில் சென்று நல்ல வெண்ணையை உடனுக்குடன் கிராமங்களில் வாங்கிக் கொணர்ந்து கைதேர்ந்த ஆட்களைக் கொண்டு அனுபவ முறைப்படி உருக்கி எடுத்த நெய்தான் நல்ல நெய்யெனப்படும் …

… இந்த அடையாளமிடப்பட்ட சரக்கு கவர்ண்மென்ட் காரியாலயங்களுக்கும், ஹாஸ்டல்களுக்கும், கோவாப்பரேடிவ் ஸ்டோர்களுக்கும், பிரபல கனவான்கள் வீடுகட்கும் ஒழுங்காய்க் கொடுக்கப்பட்டு வருவதும், எல்லோராலும் புகழப்படுவதுமாகிய

அசல் நெய் இதுதான்

மணம், குணம், சுவை, சுத்தம் எல்லாவற்றிற்கும் உத்திரவாதம்

_ 1937 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள், ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்னர், ‘தினமணி’ நாளிதழின் 3 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள நெய் விளம்பரம் இது!

பிகேவி பிராண்ட் கியாரண்டீட் உத்தரவாதமுள்ள அசல் நெய், காமதேனு உத்தரவாதமான அசல் நெய், கோகுலம் மார்க்கு அசல் நெய் என்று பிராண்ட்களின் பெயர்களையும், மூன்று மார்க்குகளில் எது வாங்கினாலும் நயமே என்றும் குறிப்பிட்டுத் தொடர்ந்து, ஆந்திரத்தில் இந்த பிராண்ட் நெய் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், முகவரியுடன் சென்னையிலுள்ள தலைமை ஆபிஸ் முகவரியும் கிடைக்குமிடங்களும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன (இப்போதும் இந்த நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கிறதா என்பது தெரியவில்லை).

அந்தக் காலத்திலேயே இந்த விளம்பரத்தில் அசல் நெய் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆக, அப்போதும் ஏதோ கலப்பட நெய்யும் (நிச்சயமாக விலங்குக் கொழுப்புகளைக் கலந்திருக்க மாட்டார்கள், வாய்ப்பும் இல்லை; வேறு ஏதாவது எண்ணெய்களைக் கலந்திருக்கலாம்).

இப்படியொரு விளம்பரத்தை இந்தக் காலத்தில் செய்ய முடியுமா? காலத்தின் வளர்ச்சிப் போக்கில் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் நெய் தயாரிப்பு முறைகளிலேயே எவ்வளவோ மாற்றங்கள், முன்னேற்றங்கள் வந்துவிட்டிருக்கின்றன.

80 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள்தொகையும் நெய்யின் தேவையும் வேறு. இன்றைய மக்கள்தொகையும் நெய்த் தேவையும் வேறு. எனவே, பெரிய அளவில் தயாரிக்கத் தேவையான நுட்பங்களைக் கடைப்பிடித்தாக வேண்டியுள்ளது.

சில பத்தாண்டுகளுக்கு முன்வரையிலும்கூட ஒரு வீட்டில் நெய் காய்ச்சினால் நாலைந்து வீடுகளைத் தாண்டியிருப்பவர்களுக்கும் தெரியும் அதன் வாசனை. ஆனால், இன்று அடுப்பில் நெய் வைத்தால் அடுக்ககக் குடியிருப்பில் அடுத்த வீட்டுக்குக்கூட தெரிவதில்லை.

கலப்படம் இல்லாத பொருளே இல்லை என்கிற அளவுக்கு உணவுப் பொருள்களில் கலப்படங்கள் கலந்துவிட்டிருக்கின்றன.

திருப்பதி லட்டு புண்ணியத்தால் – நெய்யில் மாடு, பன்றி போன்றவற்றின் விலங்குக் கொழுப்புகளும் வேறு விதமான பொருள்களும் கலக்கப்படுவது எளிய மக்களும் தெரியும் வகையில் அம்பலமாகியிருக்கிறது.

தற்போது சந்தையில் ஏராளமான நெய்கள் கிடைக்கின்றன. இந்த நெய்களுக்கான விளம்பரங்களும் ‘வேற லெவலில்’ செய்யப்படுகின்றன. சிறு நகரங்களில் சிறிய அளவில் நெய் தயாரித்து விற்பவர்களும் இருக்கின்றனர்; அல்லாமல் பெரியளவிலான விளம்பரங்கள் எதுவுமின்றி சில பிராண்ட்களும் அந்தந்தப் பகுதிகளில் விற்கப்படுகின்றன. இவற்றின் விலைகளும் வெவ்வேறாக இருக்கின்றன.

சாதாரணமாக 30 லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ நெய் கிடைக்கும் என்றொரு கணக்கு கூறப்படுகிறது. இந்த மாதிரி செய்தால் உற்பத்தி விலையே கிலோ ரூ. 2000 வரை வந்துவிடும் என்கிறார்கள்.

தற்போது பெரியளவிலான தயாரிப்பில் பொதுவாக ஒரு முறை பின்பற்றப்படுகிறது. எந்திரத்தில் பாலை ஊற்றினால் அதிலிருக்கும் வெண்ணெய் தனியே பிரிந்து வந்துவிடும். வெண்ணெய் அல்லது பால் வடிவத்திலிருக்கும் வெண்ணெய் பின்னர் நீராவி முறையில் நெய்யாகத் தயாரிக்கப்படுகிறது.

ஆனால், இந்தத் தருணத்தில்தான் கலப்படமும் செய்யப்படுகிறது என்கிறார்கள்.

ஆடு, மாடு, பன்றி போன்ற விலங்குகளின் கொழுப்புகளைச் சூடேற்றினால் எண்ணெய்யாக மாறிவிடும். உடனடியாக எவ்வித மணமும் இராத இந்த எண்ணெய்களை எளிதில் நெய்யுடன் கலக்க முடியும் (நெய் விலையில் தரம் குறைந்த விலங்குக் கொழுப்பு!). உடனடியாக இதைக் கண்டுபிடிக்க இயலாது. ஆனால், கொஞ்சமாகப் பயன்படுத்துகிற வீடுகளில் நாளாக, நாளாக நெய்யில் கெட்ட வாசனை அடிக்கத் தொடங்கும். பொதுவாக நெய்தான் கெட்டுவிட்டதாக நினைத்துக் கொண்டு தூக்கிப் போட்டுவிடுவார்கள்.

இதையும் படிக்க: இலங்கை: என்ன செய்யப் போகிறார் புதிய அதிபர்?

விலங்குக் கொழுப்பு எண்ணெய்களுக்குப் பதிலாக, சோயா எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைக் கலந்தால் கலப்படத்தை எளிதில் கண்டறிய இயலாது; கொழுப்புகளுடன் ஒப்பிட கெட்டுப் போவதற்கான காலமும் அதிகமாகும். ஆனால், அதற்குள்ளாகவே வாடிக்கையாளர்கள் அந்த நெய்யைச் சாப்பிட்டுவிட்டிருப்பார்கள். ஆக, நோ பிராப்ளம்.

நெய்யுடன் 25 முதல் 30 சதவிகிதம் வரை பிற எண்ணெய் அல்லது கொழுப்பு எண்ணெய்களைக் கலக்கும்பட்சத்தில் அவ்வளவாகத் தெரியாது. எவ்வளவு காலம் வைத்திருந்து பயன்படுத்துகிறோம், எப்போது கெட்டுப் போகிறது என்பனவற்றைப் பொருத்து நெய்யின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். தவிர, கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் நெய்யுடன் சில பொருள்கள் சேர்க்கப்படுகின்றன என்றும் துறைசார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கிற எந்தவொரு நெய் பாட்டிலிலும் விலங்குக் கொழுப்பு பற்றிய வெளிப்படையான குறிப்பு எதுவும் இல்லை. ஆவின் நெய் உள்பட பெரும்பாலான நெய்களில் ஒரேமாதிரியான சில பொருள்கள் / சொற்கள் இருக்கின்றன.

Nutritional value – ஊட்டச்சத்து மதிப்பு என்ற தலைப்பில் Milk Fate – பாலிலுள்ள கொழுப்பு, Saturated Fatty Acid / Saturated Fat – நிறைவுற்ற கொழுப்பு, Mono Unsaturated Fatty Acid – தனி நிறைவுறா கொழுப்பு, Trans Fatty Acid – மாற்றியமையப்பெற்ற கொழுப்பு அமிலம், Poly Unsaturated Fatty Acid – பல நிறைவுறா கொழுப்பு அமிலம் என்ற பெயரில் சில அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் நிறைவுற்ற கொழுப்பு தவிர மற்றவை எல்லாமும் பால், விலங்கு, வித்துகளில் காணப்படக் கூடியவை. சிலவற்றை உணவுப் பொருள்களில் எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம் என்ற வரையறைகளும் இருக்கின்றன.

ஆக, நாம் இப்போது கடைகளில் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிற நெய்கள் யாவும் உண்மையில் – நூறு சதவிகிதமும் – பாலிலிருந்து மட்டுமேதான் தயாரிக்கப்படுகின்றனவா?

நெய்யில் பாலுக்கு சம்பந்தமில்லாத வேறு என்னென்ன பொருள்கள் கலக்கப்படுகின்றன,

அவ்வாறு கலக்கப்படுகின்றன என்றால் அவை எங்கிருந்து எடுக்கப்படுகின்றன,

அவற்றின் டெக்னிகலான பெயர்கள் அல்லாமல் இயல்பான பெயர்கள் என்னென்ன?

நாம் சாப்பிடுவது, பால் நெய்யா? சோயா நெய்யா? விலங்குக் கொழுப்பு நெய்யா? அல்லது எல்லாம் கலந்துகட்டியதா? வெஜிடேரியன் நெய்யா? நான்வெஜ் நெய்யா?

ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு பிரசாதம். திருப்பதியில் லட்டு. லட்டுகள் தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் விலங்குக் கொழுப்புகள் என்றதும் வெஜ், நான்வெஜ் என்று ஒரே திசையில் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

விவாதிக்கப்பட வேண்டியதும் விளக்கம் கிடைக்க வேண்டியதும் தொடர் நடவடிக்கை தேவைப்படுவதுமான விஷயம் – கலப்படம்!

சந்தையில் நாம் வாங்குகிற நெய் கலப்படமற்றது என்பதை யார் நமக்குச் சொல்வார்கள்? அல்லது உறுதிப்படுத்துவார்கள்? யார் உறுதிப்படுத்த வேண்டும்?

இதையும் படிக்க: சொல்லப் போனால்… திமுக பவள விழாவும் திராவிட சமரசங்களும்!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024