Saturday, September 21, 2024

இதை செய்தால் அக்ரமுக்குப்பின் ஆசியாவின் சிறந்த பவுலர் அவர்தான் – பாலாஜி பாராட்டு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

இந்த டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தால் வாசிம் அக்ரமுக்கு பின் ஜஸ்பிரித் பும்ரா ஆசியாவின் சிறந்த பவுலராக கொண்டாடப்படுவார் என்று பாலாஜி பாராட்டியுள்ளார்.

சென்னை,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு பும்ரா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் விக்கெட் வீழ்த்துவதுடன் குறைந்த எக்கனாமியிலும் சிறப்பாக பந்து வீசி அசத்தி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

கடந்த டி20 உலகக்கோப்பையை காயத்தால் தவற விட்ட ஜஸ்பிரித் பும்ரா இம்முறை இந்திய அணியின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சுத் துறையின் ஆணிவேராக செயல்பட்டு வருகிறார்.ஏனெனில் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்ட அவர் தன்னுடைய தரமான பந்துகளால் உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களையும் திணறடித்து வருகிறார். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கக்கூடிய டி20 கிரிக்கெட்டில் எந்த நேரத்திலும் துல்லியமான யார்க்கர் பந்தை வீசி விக்கெட்டை எடுக்கும் திறமை கொண்ட அவர் இந்திய அணியின் துருப்பு சீட்டாக வலம் வருகிறார்.

அப்படி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்துவதால் தற்சமயத்தில் பும்ரா உலகின் சிறந்த பவுலராக திகழ்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் சமீபத்தில் பாராட்டினார்.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தால் வாசிம் அக்ரமுக்கு பின் ஜஸ்பிரித் பும்ரா ஆசியாவின் சிறந்த பவுலராக கொண்டாடப்படுவார் என்று லட்சுமிபதி பாலாஜி பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

"ஒருவேளை இந்த டி20 உலகக்கோப்பை பட்டத்தை இந்தியாவுக்காக சிறப்பாக பந்து வீசி பும்ரா வென்று கொடுத்தால் வாசிம் அக்ரமுக்கு பின் அவர் ஆசியாவின் 2-வது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தனது மரபை உருவாக்குவார். வாசிம் பாய் வேகப்பந்து வீச்சின் பரிணாமத்தை மாற்றியவர். பும்ரா, வாசிம் பாய் ஆகிய இருவருமே வேகப்பந்து வீச்சாளர்களாக வந்துள்ளனர். அவர்களுடைய மேல் உடல் வலுவாக இருக்கும். அவர்கள் ரன் அப்பில் எதையும் பெறுவதில்லை.

மாறாக கை, மணிக்கட்டு, பந்து வீசும் கையின் பலம் ஆகியவற்றாலேயே அவர்கள் அனைத்தையும் பெறுகின்றனர். இதை வைத்து அவர்கள் துல்லியமான யார்க்கர், வேகம், வேகத்தில் மாற்றம், கோணத்தில் மாற்றம் போன்றவற்றை செய்கின்றனர். அதனால் அவர்கள் பிட்ச்சை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்துகின்றனர். எனவே வாசிம் அக்ரமுக்கு அடுத்தபடியாக எங்களுடைய கண்டத்தில் பும்ரா சிறந்தவர். அந்த வகையில் பும்ரா அடுத்த சகாப்தத்திற்கான மகத்துவத்தை சேசிங் செய்ய இது சரியான நேரம் என்று கருதுகிறேன்" என கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024