Wednesday, November 6, 2024

முதல்வரை சந்திக்கச் சென்ற ஏகனாபுரம் விவசாயிகள் கைது!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை கைவிடக்கோரி ஏகனாபுரம் கிராம விவசாயிகள் முதல்வரை சந்திக்க பேரணியாகச் செல்ல முயன்றபோது 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.

இந்நிலையில் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டமைப்பினர் ஏகனாபுரம் கிராமத்தில் கடந்த 796 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க | இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மரணம்

இன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் பவளவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் முதல்வரை நேரில் சென்று சந்தித்து மனு அளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரிடம் முன் அனுமதி கோரினர்.

தொடர்ந்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில் அனுமதியை மீறி பேரணியாகச் சென்று மனு அளிக்க உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இதையும் படிக்க | சென்னையில் அனைத்து பொதுக் கழிப்பிடங்களும் தனியார்மயமாகின்றன!

இதனையொட்டி ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு சுங்குவார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் கூட்டமைப்பினர் 17 பேர் அம்பேத்கர் சிலை முன்பு கற்பூரம் ஏற்றி பேரணியை துவக்கி 100 மீட்டர் தூரம் சென்ற நிலையில், காவல்துறையினர் தடுத்தனர்.

காவல்துறை தடுத்தும் செல்ல முற்பட்டதால் 17 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

இதுகுறித்து பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் கூட்டமைப்புக் குழு நிர்வாகி சுப்பிரமணி கூறுகையில், 'பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் பல வழிகளில் எதிர்ப்பு தெரிவித்தும் இன்று காஞ்சிபுரம் வரும் முதல்வரை சந்திக்க முறையான அனுமதி கோரிய நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் பேரணியாக முதல்வரை சந்திக்க எங்கள் குழு நிர்வாகிகள் சென்றபோது காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்' என தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் இன்று (28 ஆம் தேதி ) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள திமுக பவள விழாவில் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிறார்.

You may also like

© RajTamil Network – 2024