சீனத்தின் நன்னிங் மாகாணத்தில், கழிவுநீர் குழாயின் அழுத்தம் அதிகரித்து திடீரென அது வெடித்து, மனிதக் கழிவு வானத்தில் 33 அடி தூரத்துக்கு வீசப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில், சாலையோரம் பூமிக்கு அடியில் இருந்த கழிவுநீர் குழாய் வெடித்து மனிதக் கழிவுகள் வானத்தை நோக்கி பீய்ச்சி அடிக்கப்படுகிறது.
சீனத்தில் நடந்த இந்த சம்பவத்தின் விடியோவைப் பார்ப்பவர்கள் பலருக்கும் குடலைப் பிரட்டலாம். சிலருக்கு வாந்தியே கூட வரலாம். அந்த அளவுக்கு மனிதக் கழிவுகள் வானத்தை நோக்கி பாய்ச்சப்பட்டு, மீண்டும் அது சாலையிலேயே வாகனத்தில் சென்று கொண்டிருப்பவர்கள் மீது மழையாக விழுகிறது.
இதையும் படிக்க.. 30 ஆண்டுகளுக்கு முன்.. தந்தையை கொன்று புதைத்த தாய், சகோதரர்கள்! காட்டிக்கொடுத்தது ஏன்?
நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் தலை முழுக்க மனிதக் கழிவுகள் கொட்ட, என்ன நடக்கிறது என்பதே புரியாமல், எங்கு ஓடுவது, எப்படி தப்பிப்பது என முடிவெடுக்கும் முன் எல்லாம் நடந்து முடிந்துவிடுகிறது.
சாலைகளில் சென்றுகொண்டிருந்த கார்கள் முழுக்க மஞ்சள் போர்வை போர்த்தியது போல கழிவுகள் மூடிக்கொள்ளும் விடியோக்களும் சமூக வலைதளத்தில் வலம்வருகின்றன.
இந்த சம்பவம் நடந்தது எப்படி என்று விசாரணை நடத்தப்பட்டதில், கட்டுமானப் பணியாளர்கள் புதிதாக அமைத்த கழிவுநீர் கால்வாயின் அழுத்தத்தை பரிசோதித்தபோது, அது எதிர்பாராத விதமாக வெடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் சில வாகனங்கள் தாறுமாறாக சென்று மோதி சேதமடைந்ததாகவும், இதில் யாருக்கும் உடல் காயங்கள் ஏற்படவில்லை என்றும், ஆனால் மனிதக் கழிவு கொட்டியதில் பலருக்கு மனக்காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கழிவுநீர் குழாய் வெடித்த இடத்தில், மிகப்பெரிய அளவில் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஆனால், இந்த சம்பவத்தில் சிக்கிய கார்களின் உரிமையாளர்களோ, என் கார் முழுக்க முழுக்க மனிதக் கழிவுகளால் நிரம்பிவிட்டது. இதனை எத்தனை சுத்தம் செய்தாலும் உள்ளே அமர்ந்து காரை ஓட்ட முடியவில்லை, நாற்றமெடுக்கிறது என்கிறார். சிலர், காருக்குள் உட்கார்ந்தாலே அந்த மோசமான அனுபவத்தால் குமட்டல் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள்.
இதையும் படிக்க.. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட வந்தேபாரத் விடியோவில் பெரு நாட்டின் ரயில்! வைரலானதும் பதிவை நீக்கினார்! ஆனால்..
இந்த விடியோவைப் பார்க்கும் பலரும் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், தொடர்ந்து பலராலும் இந்த விடியோவை பார்க்க முடியவில்லை என்றே கூறுகிறார்கள்.