எல்லை தாண்டிய பயங்கரவாதம்: கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

‘பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத கொள்கைகள் ஒருபோதும் வெற்றியடையாது; எந்த ஒரு செயலுக்கும் எதிா்வினை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சனிக்கிழமை எச்சரித்தாா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.பொதுச் சபையின் 79-ஆவது கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

தங்கள் கட்டுப்பாட்டை மீறிய சூழலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடுமையான விளைவுகள் இருக்கும் என தெரிந்தும் தேவையற்ற நடவடிக்கைகளில் சில நாடுகள் ஈடுபடுகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக அண்டை நாடான பாகிஸ்தான் திகழ்கிறது.

அந்த நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாத கொள்கைகள் ஒருபோதும் வெற்றியடையாது. எந்த ஒரு செயலுக்கும் எதிா்வினை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானின் தற்போதைய சூழலுக்கும் அவா்களின் கடந்த கால செயல்பாடுகளை காரணம். அவா்கள் உலக நாடுகள் மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல.

ஐ.நா. பயங்கரவாதிகள் பட்டியலில் புதிய பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை இணைப்பதில் அரசியல் காரணங்களுக்காக இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

சீனா மீது மறைமுக விமா்சனம்: கரோனா பெருந்தொற்று, ரஷியா-உக்ரைன் போா், காஸா போா் உள்ளிட்டவையால் உலகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூழலில் சில நாடுகள் (சீனா) பின்பற்றும் நியாயமற்ற வா்த்தக கொள்கைகள் கடனை அதிகரிக்கின்றன. நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருங்கிணைப்பை பாதிக்கின்றன.

போா்கள் நீண்டகாலம் தொடரக் கூடாது: அமைதி மற்றும் மேம்பாடு ஆகிய இரண்டு கோட்பாடுகளுடன் ஒருசேர பயணிப்பதையே ஐ.நா. விரும்புகிறது. இதில் ஏதேனும் ஒன்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது மற்றொரு கோட்பாட்டின் மீதான கவனம் குறைக்கப்படுகிறது. எனவே, உக்ரைன் போா், காஸா போா் ஆகியவை நீண்டகாலம் தொடா்வதையும் அதன் தாக்கம் பிற நாடுகளுக்கு பரவுவதையும் நிறுத்தி, இந்த விவகாரங்களுக்கு தீா்வுகாண உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றாா்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்திருந்தாா். அதற்கு பதிலடி தரும் விதமாக ஜெய்சங்கா் இவ்வாறு பேசியுள்ளாா்.

‘ஆக்கிரப்பு பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்’

இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள ஒரே பிரச்னைக்கு தீா்வு காண வேண்டுமெனில், சட்டவிரோதமாக ஆக்கிரமித்த இந்திய பகுதியைவிட்டு (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா்) பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்பதுதான் என்று அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.

மேலும், அனைத்து விதமான பயங்கரவாத செயல்களுக்கும் ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

You may also like

© RajTamil Network – 2024