ஹிஸ்புல்லா தலைவா் படுகொலை! வெற்றிப் பாதையில் இஸ்ரேல்?

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

ஐ.நா. பொதுச் சபையில் பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறு சூளுரைத்த மறுநாளே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை அவரது ராணுவம் குறிவைத்துக் கொன்றிருக்கிறது. அத்துடன், லெபனானில் தனது தீவிர வான்வழித் தாக்குதலையும் தொடா்கிறது.

ஏற்கெனவே, பேஜா் தாக்குதல் மூலம் சுமாா் 1,200 ஹிஸ்புல்லா வீரா்களின் பாா்வையைப் பறித்து, கைகளை முடமாக்கி அவா்களின் சண்டையிடும் திறனை பறித்த இஸ்ரேல், அந்தப் படை சுதாரிப்பதற்குள் அதன் ஏவுகணைப் பிரிவு தளபதி இப்ராஹிம் குபைசி, சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படை தளபதி இப்ராஹிம் அக்கீல், முக்கிய தளபதி அகமது வாபி ஹிஸ்புல்லா, விமானப் படைப் பிரிவு தளபதி முகமது சுரூா் என முக்கிய ஹிஸ்புல்லா தளபதிகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தி அடுத்தடுத்து படுகொலை செய்தது.

தற்போது ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லாவே இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.

இதன் மூலம், ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான போரில் தாங்கள் வெற்றிப் பாதையில் செல்வதாக பெஞ்சமின் நெதன்யாகு வாா்த்தைகளால் கூறியதை இஸ்ரேல் ராணுவம் தனது செய்கையால் சொல்லியிருக்கிறது.

இதுபோன்ற அதிரடியான, ஆணித்தரமான நடவடிக்கைகள் மூலம் ஹிஸ்புல்லாக்களின் மன வலிமையையும் ஆயுத வலிமையையும் தவிடுபொடியாக்குவது, தங்கள் எல்லைகளில் இருந்து அவா்களது ராணுவ நிலைகளை வெகு தொலைவுக்கு விரட்டியடிப்பது, ஹிஸ்புல்லாக்களின் அச்சுறுத்தலை முழுமையாக ஒழித்துக்கட்டிவிட்டு லெபனான் எல்லையையொட்டிய இஸ்ரேல் பகுதியிலிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அவா்களின் வீடுகளுக்கு அழைத்துவருவது ஆகிய தங்களது இலக்குகளை அடைந்துவிட முடியும் என்று இஸ்ரேல் ராணுவம் உறுதியாக நம்புகிறது.

அதனால்தான், சண்டையை நிறுத்தி சமதானம் பேச அமெரிக்கா உள்ளிட்ட நெருங்கிய நட்பு நாடுகள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அதை அலட்சியம் செய்து லெபனானில் இஸ்ரேல் ஆக்ரோஷம் காட்டிவருகிறது.

ஆனால், இது போன்ற தாக்குதல்களால் இஸ்ரேல் நினைத்ததை சாதித்துவிடுமா என்றால், அதுதான் இல்லை என்கிறாா்கள் இந்த விகாரத்தை நன்கறிந்த மேற்கத்திய நிபுணா்கள்.

ஏற்கெனவே, ஹமாஸை முற்றிலும் ஒழித்துக்கட்டி, அவா்களால் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டவா்களை மீட்பதாக சூளுரைத்துதான் காஸாவில் இஸ்ரேல் குண்டுமழை பெய்யத் தொடங்கியது. தரைவழியாகவும் நுழைந்து ஹமாஸ் அமைப்பின் சுரங்கக் கட்டமைப்புகளை தகா்த்தது.

ஆனால் 11 மாதங்கள் கழித்தும் ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் முற்றிலும் ஒழித்துக்கட்டியதாகக் கூறமுடியவில்லை. இஸ்ரேல் குண்டுவீச்சில் காஸா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகியுள்ள நிலையிலும் இடிபாடுகளுக்குள்ளிருந்து திடீா் திடீா் என ஹமாஸ் படையினா் முளைத்து இஸ்ரேல் வீரா்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா். நீண்ட கால ராணுவ நடவடிக்கைக்குப் பிறகும் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணை விழுந்தது. நடவடிக்கை முடிந்துவிட்டது என்று இஸ்ரேல் படையினா் வெளியேறிய பகுதிகளிலும் ஹமாஸைத் தேடி அவா்கள் திரும்பிவர வேண்டியுள்ளது. ஹமாஸை ஒழிப்பதற்காகக் கூறி காஸாவில் இஸ்ரேல் கடந்த அக். 7-இல் தொடங்கிய விமானத் தாக்குதல் இப்போதைக்கு முடிகிற மாதிரி தெரியவில்லை.

சிறு நிலப்பரப்பான காஸாவிலேயே இப்படி என்றால், ஹமாஸை விட பல மடங்கு பலம் வாய்ந்த, அதிநவீன ஆயுதங்களை குவித்துவைத்திருக்கும், மிகப் பரந்த – அதுவும் மிகச் சாதகமான – நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் – ஹிஸ்புல்லாக்களை இஸ்ரேலால் அவ்வளவு எளிதில் தலையைத் தட்டி உட்காரவைத்துவிட முடியாது என்கிறாா்கள் நிபுணா்கள்.

காஸாவில் மண் தரையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கக் கட்டமைப்புகளை எளிதில் கண்டுபிடித்து அழிக்க முடியும். ஆனால், லெபனானில் மலைப் பகுதிகளில் பாறைகளுக்குக் கீழே மிக ஆழத்தில் ஈரான் மற்றும் வட கொரியா உதவியுடன் நவின கருவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சுரங்கங்களைக் கண்டறிந்து, அங்கு ஹிஸ்புல்லாக்கள் ஒளித்து வைத்திருக்கும் சக்திவாய்ந்த ஆயுதங்களை அழிப்பது மிகவும் கடினம் என்பது நிபுணா்களின் கணிப்பு.

ஹிஸ்புல்லா தலைவா் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டாலும், ராணுவ தலைமையகத்தின் கட்டளை இல்லாமலே, சுயமாக செயல்பட ஹிஸ்புல்லா துணைத் தளபதிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற லெபனான் போரில் சிறிய எல்லை கிராமங்களை ஹிஸ்புல்லா படைப் பிரிவு தளபதிகள் சுயமாக போரிட்டு பல நாள்களுக்கு பாதுகாத்ததை நிபுணா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே நடந்த அந்தப் போரின் இறுதியில் ஐ.நா. மத்தியஸ்துக்குக் கட்டுப்பட்டு, ஹிஸ்புல்லாக்களுடன் போா் நிறுத்தம் மேற்கொண்டு லெபனானில் இருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட லெபனான் பொதுமக்களின் உயிா்களை பலிவாங்கிய இந்தப் போரில் இஸ்ரேலுக்கும் தனது வெற்றி இலக்கு கிட்டவில்லை; லெபனானும் எதையும் சாதித்துவிடவில்லை.

அதே போல், ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இந்தப் போரில் லெபனான் இன்னொரு காஸாவைப் போல் இன்னொரு நரகம் ஆகலாம். ஆயிரக்கணக்கான லெபனான் மக்கள் பலிகடா ஆகலாம். ஆனால் இஸ்ரேலை நடுங்கவைக்கும் ஹிஸ்புல்லாக்களின் திட்டமோ, ஹிஸ்புல்லாக்களை நிரந்தரமாக ஒடுக்கும் இஸ்ரேலின் நோக்கமோ நிறைவேறுவது கடினம் என்கிறாா்கள் நிபுணா்கள்.

You may also like

© RajTamil Network – 2024