அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் 2 ஆட்டங்களில் விளையாட தடை

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

அடுத்து நடக்க இருக்கும் 2 உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் எமிலியானோ மார்டினெஸ் விளையாட முடியாது.

பியூனஸ் அயர்ஸ்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும்.

தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்றன. இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.

இதில் கடந்த 10-ந் தேதி நடந்த கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது. பின்னர் ஏமாற்றத்துடன் ஓய்வறைக்கு திரும்பி கொண்டிருந்த அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெசை கேமராமேன் ஒருவர் படம்பிடித்தார். அப்போது கேமராவை தள்ளிவிட்டதுடன் கேமராமேனையும் அவர் அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு சில தினங்களுக்கு முன்னதாக நடந்த சிலிக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் தகாத சைகையை காட்டினார். இந்த 2 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அவருக்கு 2 போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது. இதனால் அவர் அடுத்து நடக்க இருக்கும் வெனிசுலா, பொலிவியா அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் விளையாட முடியாது.

You may also like

© RajTamil Network – 2024