ஸ்டெம் செல் தானம் பெற்று சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்: மருத்துவர்கள் அருணா ராஜேந்திரன், ஸ்மிதா ஜோஷிக்கு பாராட்டு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஸ்டெம் செல் தானம் பெற்று சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்: மருத்துவர்கள் அருணா ராஜேந்திரன், ஸ்மிதா ஜோஷிக்கு பாராட்டு

சென்னை: அரிய வகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்த சிறுவனுக் காக தீவிர முயற்சி எடுத்து, ஸ்டெம் செல் தானம் பெற்று சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளார் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் அருணா ராஜேந்திரன்.

திருச்சி மாவட்டம் பாப்பாபட்டியைச் சேர்ந்த ஏழை விவசாயி சங்கர். இவரது மனைவி ஜானகி. இவர்களின் மூத்த மகன் 11 வயதுசிறுவன் செல்வா. 7-ம் வகுப்பு படித்து வருகிறான். பான்கோனி அனீமியா என்ற அரிய வகை மரபணு கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், அதனால் ஏற்பட்ட எலும்புமஜ்ஜை செயலிழப்பால் படுத்த படுக்கையான நிலையில், சென்னைஎழும்பூரில் உள்ள அரசு குழந் தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

மருத்துவமனையின் ஹீமாட்டாலஜி துறையின் இணை பேராசிரியரும், எலும்பு மஜ்ஜை மாற்று பிரிவின் பொறுப்பாளருமான மருத்துவர் அருணா ராஜேந்திரன், சிறுவனின் உயிரைக் காப்பாற்ற ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்பதை பரிசோத னைகள் மூலம் கண்டறிந்தார்.

பெற்றோரின் ஸ்டெம் செல்பொருந்தாததால், ஸ்டெம் செல் தானம் அளிக்க விரும்புபவர்களின் விவரங்களைப் பதிவு செய்து சேவை ஆற்றி வரும் டிகேஎம்எஸ்- பிஎம்எஸ்டி என்கிற அறக்கட்டளை யின் உதவியை மருத்துவர் அருணா ராஜேந்திரன் நாடினார். அப்போது, அந்த அறக்கட்டளையில் பதிவு செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த கிளினிக்கல் பார்மசிஸ்ட் மருத்துவர் ஸ்மிதா ஜோஷி என்பவரின் ஸ்டெம் செல் சிறுவன் செல்வாவுக்கு பொருத்தமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்மிதா ஜோஷியை தொடர்புகொண்டு விவரத்தை தெரிவித்ததும், அவரும் ஸ்டெம் செல்லை தானம் அளித்தார். ஸ்டெம் செல் மாற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர், சிறுவன் செல்வா பூரணமாக குணமடைந்துள்ளான்.

இந்நிலையில், சென்னையில் மருத்துவர் அருணா ராஜேந்திரன், ஸ்டெம் செல் தானம் அளித்த மருத்துவர் ஸ்மிதா ஜோஷி, டிகேஎம்எஸ் – பிஎம்எஸ்டி அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி பேட்ரிக் பால் மற்றும் சிறுவன் செல்வா, பெற்றோர் ஆகியோரின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அப்போது, சிறுவனும், பெற்றோரும் கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். சிறுவனின் உயிரைக் காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்த மருத்துவர் அருணா ராஜேந்திரன் மற்றும் ஸ்டெம் செல் தானம் அளித்த மருத்துவர் ஸ்மிதா ஜோஷி ஆகியோரை அனைவரும் பாராட்டினர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024