பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்காமல் சாகமாட்டேன்..! – கார்கே

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்கும் வரை உயிருடன்தான் இருப்பேன் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி நடந்த தோ்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சுமாா் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.

மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இங்கு ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஜஸ்ரோட்டாவில் இன்று(செப். 29) நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாக்குர் பல்பீர் சிங்குக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பொதுக்கூட்ட மேடையில் பேசிக் கொண்டிருந்த கார்கே, திடீரென அசௌகரியமாக உணர்ந்தார். மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பாதுகாவலர்கள் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து, சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாவது, “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்பப் பெற்றுத் தர போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது. அதே வேளையில், வெகு சீக்கிரத்தில் நான் ஒன்றும் சாகப் போவதில்லை. பிரதமர் மோடி, அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை நான் உயிருடன்தான் இருப்பேன்.

பாஜக ஏராளமான வாக்குறுதிகளை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அளித்திருந்தது. ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. இப்போது அமித் ஷா 5 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? வேலைவாய்ப்புகளை ஏன் வழங்கவில்லை? ஜம்மு காஷ்மீரில் 65 சதவிகித அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தனை ஆண்டுகளாக பணியிடங்களை நிரப்பாமல் இருந்தது ஏன்? உண்மை என்னவென்றால், மக்களை தவறாக வழிநடத்த வேண்டும்.

  • ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்,

  • வெளிநாடுகளிலிருந்து கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம்,

  • ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும்,

மேற்கண்ட 3 வாக்குறுதிகளை நரேந்திர மோடி மக்களிடம் அளித்து வந்தார். ஆனால், மேற்கண்ட வாக்குறுதிகளை மோடியால் நிறைவேற்ற முடியவில்லை. பொய் சொல்பவர்களை பொதுமக்கள் எப்போதும் மன்னிக்கமாட்டார்கள். அதேபோல, ஜம்மு காஷ்மீர் மக்கள் நரேந்திர மோடியை எப்போதும் மன்னிக்கமாட்டார்கள். மேம்பாடு என்ற பெயரில், நரேந்திர மோடி வேலைவாய்ப்பின்மையையும், விலைவாசி உயர்வையும், பல பிரச்னைகளையும் மக்களுக்கு அளித்துள்ளார்.

நாட்டில் தொழிற்சாலைகளையும், பெரிய நிறுவனங்களையும் நேரு அவர்கள் அமைத்தார். நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டார் நேரு.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, ஜம்மு காஷ்மீரில் பீர் பஞ்ஜால் சுரங்கம் உள்பட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டன. குழந்தைகள் இலவசமாக கல்வி பெறும் உரிமை வழங்கப்பட்டது.

இம்முறை காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியமைக்க வேண்டுமென ஜம்மு காஷ்மீர் மக்கள் தீர்மானித்துவிட்டனர்.

பாஜக இங்கு வந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகின்றனர். இது நாட்டு மக்களை, குறிப்பாக ஏழைகளையும், நம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளையும் காயப்படுத்தும் என்பதை அவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஜம்மு காஷ்மீரில் கடைசி கட்ட தேர்தல் அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் ஜம்மு காஷ்மீரின் தலைவிதியை நீங்கள் எல்லோரும் எழுதப் போகிறீர்கள். இந்நிலையில், எங்களுடைய வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024