45 நாள்களாக தூக்கமில்லை: பணி அழுத்தத்தால் இளைஞர் தற்கொலை

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர், பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த தருண் சக்சேனா (42), தனது தற்கொலைக் குறிப்பில், தனக்கு அளிக்கப்பட்ட அலுவலக இலக்கை கடந்த இரண்டு மாதங்களாக தன்னால் அடைய முடியவில்லை என்றும், இந்த மாதமும் அதனை செய்யாவிட்டால், ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என தனது மேலாளர் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இது குறித்து அந்த தனியார் நிதி நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

காலையில், வீட்டு வேலைக்கு வந்த நபர்தான், தருண் உயிரிழந்துகிடந்ததைப் பார்த்துள்ளார். இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இருந்த அறையை வெளிப்புறமாக தாழிட்டுள்ளார். இவருடன் இவரது பெற்றோரும் வசித்து வந்துள்ளனர்.

தனது மனைவிக்கு ஐந்து பக்கத்தில் எழுதியிருக்கும் கடிதத்தில், தான் முடிந்த அளவுக்கு முயற்சித்தும் கூட, நிறுவனம் அளித்த இலக்கை தன்னால் அடைய முடியவில்லை. நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியவர்களின் தவணைத் தொகைகளை வசூலிக்க வேண்டிய பொறுப்பை தருண் பார்த்து வந்ததாகவும், ஒரு சில காரணங்களால் தன்னார் சில நிலுவைகளை பெற முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்திலேயே இருந்துள்ளார். தொடர்ந்து தனக்கு கருணை வழங்குமாறு மேலாளர்களுக்கும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த வேலை அழுத்தம் காரணமாக தனது எதிர்காலம் பற்றிய அச்சத்துடனே அவர் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் தான் சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டதாகவும், நான் போகிறேன் என்றும் கடிதத்தை முடித்துள்ளார்.

பணி அழுத்தம் காரணமாக தான் 45 நாள்களாக தூங்கவில்லை, எப்போதாவதுதான் சாப்பிட முடிந்தது, நான் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன், முடிந்தால் இலக்கை அடைந்துவிடு, இல்லையேல் வேலையை விட்டுச் சென்றுவிடு என மேலாளர்கள் மிரட்டிக்கொண்டே இருந்தார்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது இரண்டு பிள்ளைகளுக்கும் இந்த ஆண்டு முழுமைக்குமான கல்விக் கட்டணத்தை தான் செலுத்திவிட்டதாகவும், குடும்ப உறுப்பினர்கள் தன்னை மன்னித்துக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும்படியும், இரண்டாவது மாடியில் வீடு கட்டி தனது குடும்பத்தினருக்குக் கொடுத்தால் அவர்கள் இனியாவது நிம்மதியாக வாழ்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது காப்பீட்டுத் தொகையை குடும்பத்துக்கு பெற்றுக்கொடுக்கும்படியும், தனது மேலாளரின் பெயரைக் குறிப்பிட்டு, இவர்தான் என் மரணத்துக்குக் காரணம், அவரது பெயரில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் எழுதியிருக்கிறார்.

ஏற்கனவே, கடந்த சில நாள்களுக்கு முன்பு, 26 வயதே ஆன பட்டயக் கணக்காளராக பணியாற்றி வந்த அன்னா செபாஸ்டின் மரணம் அடைந்தது நாட்டையே உலுக்கிய நிலையில், தருண் தற்கொலை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024