உட்கட்சி பூசலால் வீழ்த்தப்பட்ட ராமச்சந்திரன்? – படுகர் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கொறடா பதவி

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

உட்கட்சி பூசலால் வீழ்த்தப்பட்ட ராமச்சந்திரன்? – படுகர் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கொறடா பதவி

உதகை: நீலகிரி மாவட்ட உட்கட்சிப் பூசலால் அமைச்சர் பதவியை இழந்த கா.ராமச்சந்திரன், படுகர்சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம்அளிக்கு வகையில் அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக நீலகிரி மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக், தற்போது அமைச்சர் பதவியை இழந்துள்ள கா.ராமச்சந்திரன் ஆகியோர் நீண்டகாலமாக எதிரும், புதிருமாகவே செயல்பட்டு வருகின்றனர். பா.மு.முபாரக் இஸ்லாமிய சமூகத்தையும், கா.ராமச்சந்திரன் படுகர் இனத்தையும் சேர்ந்தவர்கள்.

1996-ல் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வென்ற பா.மு.முபாரக், அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார். 2016-ல் குன்னூர் தொகுதியில் பா.மு.முபாரக் போட்டியிட்டபோது, கா.ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கட்சித்தலைமை அவர்களை சமாதானப்படுத்தியது. ஆனாலும், அந்த தேர்தலில் பா.மு.முபாரக் வெற்றிவாய்ப்பை இழந்தார். இதற்கு உட்கட்சிப் பூசலே காரணம் எனக் கூறப்பட்டது. 2006-ல் கூடலூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கா.ராமச்சந்திரன், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் கதர் வாரியத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 2011-ல்குன்னூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2021-ல் மீண்டும் குன்னூர்தொகுதியில் வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில்வனத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால், அவருக்கு எதிராக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் காய் நகர்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ராமச்சந்திரனின் மருமகன் தலையீடு அதிகமாக இருக்கிறது என்று தலைமைக்குப் புகார்கள் சென்ற நிலையில், அவர் சுற்றுலாத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

கட்சி நிகழ்வுகளில் பா.மு.முபாரக், கா.ராமச்சந்திரன் இருவரும் இணைந்து பங்கேற்றாலும், அவர்களிடையே பல்வேறு விஷயங்களில் மோதல்போக்கு நீடித்தது. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டுவந்த நிலையில், அமைச்சர் கா.ராமச்சந்திரன் பதவி இழக்கிறார் என்று பா.மு.முபாரக் ஆதரவாளர்கள் தொடர் பிரச்சாரம் செய்து வந்தனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, கடந்த சில நாட்களாக தீவிரமாகப் பணியாற்றி வந்தார் ராமச்சந்திரன். மேலும், அரசுஅலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசின் திட்டங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார்.

தற்போது அமைச்சரவையிலிருந்து கா.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தங்களின் முறையீட்டுக்கு கிடைத்த வெற்றிஎன்று பா.மு.முபாரக் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். அதேநேரம், மாவட்டத்தில் திமுக வென்ற ஒரேஇடம் மற்றும் படுகரின மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதால் கா.ராமச்சந்திரனுக்கு அரசு கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது.

கா.ராமச்சந்திரனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது விருப்பத்தின் பேரிலேயே கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அரசு கொறடாவாக நியமித்ததன் மூலம் அவருக்கு உரிய அங்கீகாரத்தை கட்சித் தலைமை வழங்கியுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம், மாவட்ட திமுகவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப்போகத்தான் தெரியும் என்கின்றனர் கட்சியினர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024