“மன்னிப்பு கேட்டு.. பழனிக்கு போய் சேவை பண்ணுங்க..” – இயக்குனர் மோகனுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக தொடர்ப்பட்ட வழக்கில் சினிமா இயக்குனர் மோகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

மதுரை,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சினிமா இயக்குனர் மோகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக என் மீது பழனி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்து கடவுள்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன் நான். மேலும் முருக பக்தரும் கூட. பழனி பஞ்சாமிர்தம் விவகாரத்தில் நான் எந்த ஒரு உள்நோக்கத்துடனும் செயல்படவில்லை. தவறான நோக்கத்துடன் அளித்த புகாரின்பேரில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, சமூக வலைதளத்தில் வெளியான கருத்துகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் அதனை மனுதாரர் பரப்பியுள்ளார். இவர் மீது சமயபுரம் போலீசிலும் வழக்குப்பதிவானது. அந்த வழக்கில் ஜாமீனில் வந்துள்ளார். இந்த நிலையில் மனுதாரருக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் அனுமதிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, உண்மையிலேயே பழனி கோவில் மீது அக்கறை இருந்தால் அங்கு சென்று தூய்மை பணி மேற்கொள்ளலாம். அல்லது பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் சென்று கூட 10 நாட்கள் சேவை செய்யலாம் என கருத்து தெரிவித்தார்.

விசாரணை முடிவில், நாளிதழ்களில் இந்த விவகாரம் குறித்து மனுதாரர் மன்னிப்பு கோரி விளம்பரம் வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024