Wednesday, October 23, 2024

இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுக – முத்தரசன் வலியுறுத்தல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும், தொழிலுக்கும் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுவது என்பது எதேச்சையாக நடக்கக் கூடியது அல்ல. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கக் கூடிய செயலாகும். வேண்டுமென்றே திட்டமிட்டு தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை கடற்படை மட்டுமல்லாது கடற்கொள்ளையர்களும், தாக்குதலை தொடர்கின்றனர். தமிழக மீனவர்கள் மீது கொடிய தாக்குதல், வலைகளை சேதப்படுத்துவது, படகுகளை பறிமுதல் செய்வது, மீனவர்களை சிறையில் அடைப்பது, சித்திரவதை செய்வது, மொட்டையடித்து அசிங்கப்படுத்துவது, கோடிக்கணக்கில் அபதாரம் விதிப்பது என்று வரம்பு மீறிய அனைத்து நடவடிக்கைகளையும், இலங்கை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த 17 மீனவர்களையும், இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. இவைகள் தொடரும் நிலையில் மத்திய அரசு இக்கடுமையான பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழக மீனவர்களை பாதுகாக்க முன்வராமல் இருப்பது மிகுந்த கவலைக்குரியது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்கவும், படகுகளை மீட்டு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024