செந்தில் பாலாஜி பிணையில் விடுதலை செய்யப்பட்டதில் யாருக்கும் வருத்தம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என்று புகழ்ந்துரைத்தது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்போது அதற்கு பொழிப்புரை எழுதியிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்தது தான் செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதல்-அமைச்சர் விளக்கமளித்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது.
செந்தில் பாலாஜி பிணையில் விடுதலை செய்யப்பட்டதில் யாருக்கும் வருத்தம் இல்லை. எந்த வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வழக்கு விசாரணைக் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பதே கொடூர மனநிலை. செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கும், அதனடிப்படையிலான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கும் முடிவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால், அதுவரை அவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால்தான் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு பிணை வழங்கியுள்ளது. அதன் பொருள் விடுதலை இல்லை. அதனால் செந்தில் பாலாஜியின் சிறை வாசம் தியாகமும் இல்லை.
செந்தில் பாலாஜியின் வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அறிந்ததை விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நன்றாக அறிவார். கையூட்டாக வாங்கப்பட்ட பணம் ரொக்கமாக செந்தில் பாலாஜி கணக்கில் செலுத்தப்பட்டதன் அடிப்படையில் தான் அவர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு, 471 நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்திருக்கிறார். இதில் என்ன தியாகம் இருக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூட முன்வரவில்லை. அதுமட்டுமின்றி, அவரை திமுகவில் சேர்த்து அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். அவருக்கு தியாகி பட்டம் சூட்டி உருகுகிறார். திராவிட மாடல் வாஷிங் மெஷின் அந்த அளவுக்கு ஊழல் கரையே தெரியாத அளவுக்கு வெளுத்து எடுத்திருக்கிறது.
அரசு வேலை தருவதாக பல்லாயிரக்கணக்கானோரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தியாகி என்றால், அவரிடம் பணத்தைக் கொடுத்து தங்களின் சொத்துகளையும், வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் என்ன துரோகிகளா? என்பதை முதலமைச்சர் தான் விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பவர் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவானவர். நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது தான் அவரது கடமை. ஆனால், அவரோ கடமையை மறந்து விட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
செந்தில் பாலாஜியை முதல்-அமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும்போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை. எனவே, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி சுப்ரீம் கோர்ட்டிற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.