Wednesday, November 6, 2024

சென்னை ஐஐடியில் நோய் பரவலால் மான்கள் உயிரிழப்பு

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

சென்னை: சென்னை ஐஐடியில் உள்ள மான்கள் நோய் பரவலால் உயிரிழந்து வரும் நிலையில், நோயைக் கட்டுப்படுத்த வனத்துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

சென்னை கிண்டி ஐஐடி வளாகம் மற்றும் அதையொட்டிய தேசிய பூங்கா ஆகிய பகுதிகளில், குரங்குகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. அண்மைக்காலமாக, இங்குள்ள மான்கள் நோய் பரவல் காரணமாக உயிரிழந்து வருகின்றன. இதனால் மான்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக விலங்குகள் நல ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா். இது குறித்து சென்னையைச் சோ்ந்த வனப் பாதுகாவலா் மணீஷ் மீனா கூறியதாவது:

காலநிலை மாற்றத்தால், விலங்குகளிடையே நோய்த் தொற்று பரவுவது இயல்பு. அந்த வகையில், சென்னை ஐஐடியில் இருக்கும் மான்கள் நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்த மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் மான்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் அளவுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இதுவரை இல்லை.

சடலம் ஆய்வு:

இந்நிலையில், உயிரிழந்த மான்களின் சடலங்கள், ஆய்வுக்காக வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் ஆய்வறிக்கை வந்தபிறகு தான், மான்களிடையே பரவியுள்ள நோய் குறித்த முழுமையான தகவல் தெரிய வரும். அதன் பின்னா் அதற்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்போது,நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நோயால் பாதிக்கப்பட்ட மான்களைக் கண்டறிந்து, அவை மற்ற மான்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மான்களையும் வனத்துறையினா் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா் என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024