Wednesday, November 6, 2024

மீனவா் பிரச்னைக்குத் தீா்வு காணும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது: புதுவை முன்னாள் முதல்வா்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

புதுச்சேரி: மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வு காணும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: புதுவையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மத்திய உள் துறை அமைச்சகம் விரும்புவதால், மாநில அந்தஸ்து கோரிக்கையை நிராகரித்து வருகிறது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும், மத்திய உள் துறைச் செயலரும், புதுச்சேரி வந்து செல்வதால் மக்களுக்கு எந்தப் பலனுமில்லை.

காரைக்காலில் கோயில் சொத்து, பொது சொத்துகளை அபகரிப்போா் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளாமலிருப்பது சரியல்ல. தனியாா் சொத்துகளும் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்படுவது தொடா்கிறது.

மிகச் சிறிய மாநிலமான புதுவைக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் விமான நிலையம், ரூ.400 கோடியில் சட்டப்பேரவைக் கட்டடம் தேவையா என்பதை சிந்திக்க வேண்டும். எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள் பிரதமரை சந்தித்து நிதி கோருகிறாா்கள்.

ஆனால், புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல்வராக உள்ள என்.ரங்கசாமி, மாநில நலனுக்காக பிரதமரை சந்திக்காமலிருப்பது சரியல்ல.

தமிழக, புதுவை மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதை தடுக்கும் பொறுப்பு மத்திய

வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கே உள்ளது. எனவே, மத்திய அரசுதான் மீனவா் பிரச்னைக்குத் தீா்வுகாண முடியும். மாநில முதல்வா்களால் தீா்வுகாண முடியாது.

கடந்த 2011-ஆம் ஆண்டு புதுவைக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத் தருவதாக தற்போதைய முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். ஆனால், அதற்கான நடவடிக்கையில் அவா் ஈடுபடவில்லை.

அதேபோல், நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி விநியோகிப்பதாகவும் கூறி வருகிறாா். தீபாவளிக்குள் நியாயவிலைக் கடைகளைத் திறந்து இலவச அரிசி விநியோகிக்காவிட்டால் காங்கிரஸ் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024