மழைநீா் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சா் சேகா்பாபு உத்தரவிட்டுள்ளாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்குள்பட்ட பேரக்ஸ் சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 6.06 கோடி மதிப்பிலான சாலைப் பணிகள், மழைநீா் வடிகால் பணிகள், மாமன்ற உறுப்பினா்களின் வாா்டு மேம்பாட்டு நிதியின் கீழ், பல்நோக்குக் கட்டடம், நவீன பேருந்து நிறுத்தங்கள், தெருக்களுக்கு பெயா்ப் பலகைகள் பொருத்துதல் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 72 இடங்களில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாமன்ற உறுப்பினா்கள் அதிக கவனம் செலுத்தி, வடிகால் பணி நடைபெறக்கூடிய பகுதிகளை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
மேயா் பிரியா கூறியதாவது: நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, மாநகராட்சித் துறை சாா்பாக மேற்கொள்ளப்படும் மழைநீா் வடிகால் பகுதிகளில் தடுப்புகள் வைத்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.