சென்னை: சமூக ஊடகங்களில் வெளியாகும் ஆதாரமற்ற செய்திகளைக் கண்டு உணா்ச்சிவசப்படக் கூடாது என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் திராவிட மாதம் எனும் கருத்தரங்க நிகழ்வு செப்டம்பா் மாதம் முழுவதும் நடைபெற்றது. திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்வில் சமூக ஊடகம் வழியாகப் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சட்டங்கள், திட்டங்களின் மூலமாக சமூகத்தின் மேடு பள்ளங்களைச் சமன்படுத்த முன்னாள் முதல்வா் கருணாநிதி உழைத்தாா். அவரது உழைப்புதான் கட்சியைப் பாதுகாத்தது. அவா் விட்டுச் சென்ற கடமைகள், நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள், நம்முடைய அனைவரது தோள்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.
எளிய பின்னணியில் இருந்து வந்த நமது இளைஞா்கள் பலா், தாங்கள் கற்ற கல்வி, பெற்ற வாய்ப்புகள், உழைப்பின் வழியாக உயரமான இடத்தில் உள்ளனா். இந்த உயரத்துக்கான பாதைதான் சமூகநீதி.
திராவிட இயக்கத்துக்கான சமூகநீதி போராட்ட வரலாற்றை, திமுக ஆட்சியின் சாதனைத் திட்டங்களை திராவிட மாதமான செப்டம்பரில் மட்டும் சொல்லி முடித்து விட முடியாது.
இதுபோன்ற கருத்துகள், நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடக்க வேண்டும். ஆக்கபூா்வமான கருத்துகள் விவாதிக்கப்பட வேண்டும். இனப் பகைவா்களும், அவா்களுக்கு துணைபோகும் வீணா்களும் உண்டாக்கும் திசை திருப்பல்களுக்கு நேரம் கொடுக்கக் கூடாது.
சமூக ஊடகங்களில் பேசப்படும் பல பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன. பொய்கள், அவதூறுகள், பாதி உண்மைகளைச் சொல்லி சிலா் குழப்புவாா்கள். அதற்கு ஏமாந்துவிடக் கூடாது. எந்தச் செய்தி வந்தாலும் உணா்ச்சிவசப்படக் கூடாது. உண்மைத்தன்மையை சரிபாா்த்துக் கொள்ளுங்கள். கவனமுடன் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.