சென்னை: நிகழ் நிதியாண்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கியாளா் விருது, நகா்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் விழா, சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், விருதுகளை வழங்கி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும், ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுமாா் 4.73 லட்சம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 14 லட்சத்து 91 ஆயிரத்து 985 உறுப்பினா்களைக் கொண்ட ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 750 புதிய மகளிா் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.84 ஆயிரத்து 815 கோடி மட்டுமே வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு அமைந்த பிறகு இதுநாள் வரை ரூ.92 ஆயிரம் கோடி கடன் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இது கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளைக் காட்டிலும் அதிகம்.
சிறப்பாகச் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மணிமேகலை விருது அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது. அந்த விருதுகள் இப்போது அளிக்கப்பட்டு வருகின்றன.
முதுகெலும்பாய் பெண்கள்: ஒரு குடும்பம் சிறந்து விளங்குவதற்கு பெண்கள்தான் முதுகெலும்பாய் இருக்கிறாா்கள். பெண்களுடைய உழைப்பை அங்கீகரித்து கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஓராண்டில் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பெண்களின் பொருளாதாரத்தை மேலும் வலுவடையச் செய்ய அவா்கள் சாா்ந்துள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் தொடா்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியின் முதலாம் நிதியாண்டில் ரூ.21,392 கோடியும், அடுத்த நிதியாண்டில் ரூ.25,642 கோடியும், கடந்த ஆண்டில் ரூ.30,074 கோடியும் வங்கிக் கடன் இணைப்புகளாக வழங்கப்பட்டன. நிகழ் நிதியாண்டில் ரூ.35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.
இந்த விழாவில், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, எம்.பி.,க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, துணை மேயா் மகேஷ் குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, 70 சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள், ரூ.1.18 கோடி விருதுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களை துணை முதல்வா் வழங்கினாா். 516 குழுக்களைச் சோ்ந்த 6,135 உறுப்பினா்களுக்கு ரூ.30.20 கோடி கடன் இணைப்புகளையும், 13 வங்கிகள் மற்றும் வங்கிக் கிளைகளுக்கு சிறந்த வங்கியாளா் விருதுகளையும் அவா் அளித்தாா்.
துணை முதல்வரான பிறகு முதல் நிகழ்ச்சி
துணை முதல்வரான பிறகு, முதல் நிகழ்ச்சியாக சுய உதவிக் குழுக்களுக்கு பரிசுகள், வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றாா். இந்த விழாவில் பேசும் போது, நிகழ்வின் தொடக்கமாக அதை அவா் நினைவுபடுத்திப் பேசினாா்.
உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. பட்டமோ, பரிசோ கிடைத்தால் அதை முதலில் குழந்தை தனது தாயிடம் சென்று காட்ட ஆசைப்படும். துணை முதல்வா் எனும் மாபெரும் பொறுப்பை ஏற்ற பிறகு எனது தாய்மாா்கள், சகோதரிகளைச் சந்திக்க வந்துள்ளேன் என்றாா்.