லெபனான் மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

ஜெருசலேம்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி முதல் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

அந்தவகையில் லெபனான் தலைநகர் பெரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடத்தை குறிவைத்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை குண்டுமழை பொழிந்தது. இந்த அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். அதேபோல், லெபனானின் தெற்கு பகுதி, தலைநகர் பெரூட் உள்பட பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் உள்பட 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், லெபனான் மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்காக லெபனான் எல்லையில் படையினர், ராணுவ ராங்கிகள், ஆயுதங்களை இஸ்ரேல் குவித்து வருகிறது. ஏற்கனவே வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக லெபனானின் தெற்குபகுதிகளில் உள்ள நகரங்களில் இருந்து வெளியேறும்படி பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட், ஏவுகணைகளை கொண்டு ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024