Tuesday, October 1, 2024

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

சண்டிகார்,

90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. அதே போல் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எனவே இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரியானாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அரியானாவின் பல்வால் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நாட்டின் அனைத்து முக்கியமான பிரச்சினைகளிலும் காங்கிரஸ் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. ஜம்மு-காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மறுத்தார்கள். முத்தலாக் பிரச்சினையில் இருந்து நமது முஸ்லிம் சகோதரிகளை விடுவிக்காமல் வைத்திருந்தது காங்கிரஸ் கட்சிதான்.

காங்கிரஸ் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை, மாறாக தங்கள் சொந்த குடும்பத்தை அதிகாரத்திற்கு கொண்டு வர முழு சக்தியையும் பயன்படுத்தினார்கள். காங்கிரஸ் இதுவரை எத்தனையோ பாவங்களை செய்திருக்கிறது. ஆனால் இன்னும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கனவு காண்கிறது.

பா.ஜ.க. ஆதரவாளர்கள் தேசபக்தர்கள். தேசபக்தியுள்ள மக்களை தவறாக வழிநடத்தும் திட்டங்களை காங்கிரஸ் தீட்டுகிறது. சாதி பிரிவினையை பரப்புவதன் மூலமும், ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றொரு சமூகத்தை தூண்டிவிடுவதன் மூலமும் இந்த நாட்டில் இருந்து தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது.

காங்கிரஸ் கட்சி வேலை செய்வதும் இல்லை, மற்றவர்களை வேலை செய்ய விடுவதும் இல்லை. அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். அதே சமயம் பா.ஜ.க. கடின உழைப்பில் கவனம் செலுத்துகிறது. காங்கிரஸ் ஒருபோதும் கடினமாக உழைக்கவில்லை.

திருப்திபடுத்தும் அரசியலை செய்வதே காங்கிரஸ் கட்சியின் திட்டமாக உள்ளது. தங்கள் வாக்கு வங்கியை திருப்திபடுத்துவதற்காக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது. கர்நாடகத்தில் இதைத்தான் செய்திருக்கிறார்கள்.

நாட்டிலேயே மிகவும் நேர்மையற்ற கட்சி காங்கிரஸ்தான். இமாசல பிரதேச தேர்தலின்போது அங்குள்ள மக்களிடம் பொய் வாக்குறுதிகளை வழங்கினார்கள். அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, 'உங்கள் வாக்குறுதிகள் என்ன ஆனது?' என்று காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் கேட்கிறார்கள். ஆனால் மக்களிடம் 'நீங்கள் யார்?' என்று காங்கிரஸ் கேட்கிறது.

மத்தியில் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறதோ, அதே அரசாங்கம் அரியானாவிலும் அமைக்கப்படும் என்ற வரலாற்றை அரியானா கொண்டிருக்கிறது. டெல்லியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியை அமைத்த நிலையில், இப்போது அரியானாவிலும் மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியை அமைக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024