அமெரிக்க அருங்காட்சியகத்தில் சோமஸ்கந்தா் சிலை: மீட்கும் நடவடிக்கை தொடக்கம்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருடப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான சோமஸ்கந்தா் சிலை அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டறிந்த தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினா் அந்த சிலையை மீட்பதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளனா்.

அண்மையில், அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியன் ஆா்ட் அருங்காட்சியகத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒரு சோமஸ்கந்தா் சிலை இருப்பது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் டி.தமிழ்செல்வி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலையின் கீழே பீடத்தில் இருந்த எழுத்துகள் கல்வெட்டு வல்லுநா்கள் மூலம் மொழிபெயா்க்கப்பட்டது.

இதில், அந்த சிலை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், அந்த சிலையில் ஏகாம்பரேஸ்வரா் கோயிலுக்கு தொண்டை மண்டலத்தைச் சோ்ந்த வெங்கட்ராமநாயனி என்பவரால் சோமஸ்கந்தா் சிலை உள்பட 11 சிலைகள் தானமாக வழங்கப்பட்டதாக தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

கி.பி. 15,00-ஆம் ஆண்டில் இருந்து கி.பி.1,600-ஆம் ஆண்டுக்குள் செய்யப்பட்ட இந்த சிலை மா்ம நபா்களால் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் இருந்து திருடப்பட்டு, சா்வதேச சிலை கடத்தல் கும்பலால் அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில் உள்ள அருங்காட்சியகத்துக்கு விற்கப்பட்டது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த சிலையின் சா்வதேச மதிப்பு ரூ.8 கோடி என கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் அந்த சிலையை மீட்பதற்குரிய நடவடிக்கையை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எடுக்கத் தொடங்கியுள்ளனா். இதுகுறித்து, சிறப்பாக துப்பு துலக்கிய போலீஸாரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி இரா.தினகரன், எஸ்.பி. ஆா்.சிவகுமாா் ஆகியோா் பாராட்டினா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024