ஆசிரியர் கல்வியில் யோகா, சம்ஸ்கிருதம், கலை, உடற்கல்வி பாடங்கள் சேர்க்கப்படும்: பங்கஜ் அரோரா தகவல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஆசிரியர் கல்வியில் யோகா, சம்ஸ்கிருதம், கலை, உடற்கல்வி பாடங்கள் சேர்க்கப்படும்: பங்கஜ் அரோரா தகவல்

சென்னை: ஆசிரியர் கல்வியில் யோகா, கலை, சம்ஸ்கிருதம், உடற்கல்வி பாடங்கள் புதிதாக சேர்க்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் பங்கஜ் அரோரா கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்புவிழா சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா அரங்கில் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இணைவேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் முன்னிலை வகித்தார். பிஎட், எம்எட் படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ – மாணவியருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார்.

மேலும், ஆராய்ச்சி பட்டம் பெற்ற 66 பேர் ஆளுநரிடம் பட்டச் சான்றிதழை பெற்றுக்கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழா மூலம் 48,510 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) தலைவர் பங்கஜ் அரோரா பட்டமளிப்பு விழா உரையில் கூறியது: “இந்தியாவில் ஆசிரியர் கல்விக்கென 15 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம். ஆசிரியர் கல்வியியல் தரத்தை பேணவும், ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தவும் இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

சமுதாயத்தை கட்டமைக்கும் கட்டிடக்கலை வல்லுநர்களாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள். சமுதாய மாற்றத்தை நிகழ்த்தும் ஆற்றல் மிக்கது ஆசிரியர் பணி. அந்த வகையில் நமது நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். தங்கள் பாடத்தில் மட்டுமின்றி கற்பித்தல் முறையிலும் அறிவை மேம்படுத்தி வர வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அன்றாடம் நிகழ்ந்து வரும் சூழலில் அதற்கேற்ப மாணவர்களின் அறிவை செம்மைப்படுத்த இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.

மாறிவரும் கல்விச்சூழலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை 2020 வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்விதான் தேசிய வளர்ச்சியின் அடித்தளம் என்று தேசிய கல்விக் கொள்கை கருதுகிறது. அந்த வகையில் ஆசிரியர் கல்விக்கான தேசிய கல்விக்கொள்கையின் தொலைநோக்கு சிந்தனையை நடைமுறைப்படுத்த என்சிடிஇ உறுதிபூண்டுள்ளது. ஆசிரியர் கல்வியில் புதுமையைப் புகுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.

இத்திட்டத்தில், யோகா கல்வி, கலை கல்வி, சம்ஸ்கிருத கல்வி, உடற்கல்வி உள்ளிட்டவை இடம்பெறும். மூத்த ஆசிரியர்கள் புதிய ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர் கல்வியில் தேசிய வழிகாட்டுதல் பயிற்சி திட்டமும், ஆசிரியர்களின் பணித்திறனை தொடர்ந்து மேம்படுத்தும் வகையில் தேசிய ஆசிரியர் திறன் மேம்பாட்டுத்திட்டமும் செயல்படுத்தப்படும்.கல்விமுறையின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள். எனவே, ஆசிரியர்களின் கற்பித்தலின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

வரும் காலத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் தேவை இருமடங்காக உயரும், எனவே, ஆசிரியர் பயிற்சி படிப்பில் இடங்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களில் 40 சதவீதம் காலியாகவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளரும், உயர்கல்வித் துறை செயலருமான பிரதீப் யாதவ் வரவேற்றார். இவ்விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.கணேசன், பேராசிரியர்கள், மாணவ – மாணவியர், பெற்றோர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024