தமிழகத்தில் 11 புதிய திட்டங்களை செயல்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் கட்கரியிடம் அமைச்சர் எ.வ.வேலு மனு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தமிழகத்தில் 11 புதிய திட்டங்களை செயல்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் கட்கரியிடம் அமைச்சர் எ.வ.வேலு மனு

சென்னை: கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு, மதுரவாயல் – சென்னை வெளிவட்டச்சாலை மேம்பாலப் பணிகள், கோயம்புத்தூர், திருவாரூர் புறவழிச்சாலைகள் உட்பட 11 புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டி கோரிக்கை மனுவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், தமிழக அமைச்சர் வேலு வழங்கினார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் டெல்லியில் நேற்று (செப்.30) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர்கள் அஜய் தம்தா, எல்.முருகன், தமிழக அரசின் சார்பில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்களிப்பது மற்றும் தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டப்பணிகளாக, கிளாம்பாக்கம் – செங்கல்பட்டு மற்றும் மதுரவாயல் – சென்னை வெளிவட்டச்சாலை வரையிலான உயர்மட்டச்சாலை, செங்கல்பட்டு – உளுந்தூர்பேட்டை வரை எட்டு வழிச்சாலையாக தரம் உயர்த்துதல், திருவாரூர் புறவழிச்சாலை, கன்னியாகுமரி- களியக்காவிளை வரை நான்கு வழிச்சாலை அமைத்தல், விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சாவூர் 4 வழிச்சாலை பணியை விரைவு படுத்துதல் குறித்து அமைச்சர் எவ.வ.வேலு வலியுறுத்தினார்.

மேலும், திருவாரூர் ரயில்வே மேம்பாலம் மறு கட்டுமானம் செய்தல், திருவண்ணாமலை மற்றும் பல்லடம் புறவழிச்சாலை அமைத்தல், வள்ளியூர் – திருச்செந்தூர் சாலை, கொள்ளேகால் – ஹானூர் சாலை, மேட்டுப்பாளையம் – பவானி சாலை, பவானி – கரூர் சாலை ஆகிய நான்கு சாலைகளையும் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துதல், திருச்சி (பால் பண்ணை) – துவாக்குடி வரையிலான சாலையை மேம்படுத்துதல், கோயம்புத்தூர் புறவழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல், தாம்பரம் – மதுரவாயல் – மாதவரம் புறவழிச்சாலையில் (சென்னை புறவழிச்சாலை) விடுபட்ட இணைப்பு வசதிகளை வழங்குதல் ஆகிய பணிகள் தொடர்பாக கோரிக்கை அளித்து வலியுறுத்தினார்.

அதன்பின், தமிழகத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைப்பணிகள் குறித்து அமைச்சர் வேலு பேசியதாவது: “மத்திய அமைச்சர், சில திட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால், திட்டங்கள் முடிக்கப்படுவதும் தாமதமாகிறது என்றார். இதையடுத்து, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட மாநிலத்தில் செயல்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் உள்ள இடர்பாடுகளைத் தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் தொடர்புடைய ராணுவம், வருவாய்த்துறை, தமிழ்நாடு மின்சாரவாரியம், நீர்வளத்துறை, வனத்துறை, மாவட்ட ஆட்சியர்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுடன் கடந்த செப்.23-ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடத்தி, சில இடர்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன.

மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டங்களில் உள்ள இடர்பாடுகளை தீர்க்கவும், தமிழகத்தின் உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தவும் தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். தமிழகத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் அனைத்தும் தொடர் கூட்டங்கள் நடத்தி இடர்பாடுகள் சரிசெய்து பணிகள் விரைவாக நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று அவர் பேசினார்.

தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்களையும் ஆய்வு செய்தார். கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை செயலர் ஆர்.செல்வராஜ், போக்குவரத்துத்துறை ஆணையர் சுஞ்சோங்கம் ஜாதக் சிறு, நெடுஞ்சாலைத்துறை தனி அலுவலர் (டெக்னிக்கல்) இரா.சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் மு.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024