காஞ்சியில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சாலை மறியல்; திடீரென திரண்டதால் பரபரப்பு – 400 பேர் கைது

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

காஞ்சியில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சாலை மறியல்; திடீரென திரண்டதால் பரபரப்பு – 400 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று (அக்.1) சாலை மறியலில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரச்சினையின் பின்னணி: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சிஐடியு சார்பில் தொழிற் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தை அங்கீரிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக தொழிலாளர் துறை உட்பட பல்வேறு தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்தைகள் தோல்வியில் முடிந்தன.

இந்தச் சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுலகம் நோக்கி பேரணியாக செல்ல தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் அங்கிருந்து பல்வேறு வாகனங்களில் வந்த தொழிலாளர்களை ஆங்காங்கே போலீஸார் மடக்கி கைது செய்தனர். இதனால் அந்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் திட்டமிட்டப்படி நடத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து சாம்சங் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தனர். போலீஸார் இவர்களின் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை.

திணறிய போலீஸ்: இதனால், போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்யலாம் என்பதால், இன்றைய (அக்.1) மறியல் போராட்டத்துக்கு தொழிலாளர்கள் மொத்தமாக வரவில்லை. சீருடை அணியாமல் பத்துப் பத்து பேராக பிரிந்து காஞ்சிபுரம் வந்தனர். அவர்கள் தனித்தனியாக பல்வேறு இடங்களில் நின்றிருந்தனர்.ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மொத்தமாக சுமார் 400-க்கும் மேற்பட்டோர் காந்தி சிலை அருகே திரண்டனர்.

இதனை சற்றும் எதிர்பாராத போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்த முடியாமல் திணறினர். இதனால் கூடுதல் போலீஸார் காந்தி சிலைக்கு வரவழைக்கப்பட்டனர். அதற்குள் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

மதுரையிலும் போராட்டம்: தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சட்டங்களுக்கு விரோதமாக செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசியல் சாசனப்படி சங்கம் அமைக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விண்ணப்பித்து 90 நாட்களுக்கு மேலாகியும் இனியும் இழுத்தடிக்காமல் தமிழக அரசு உடனடியாக சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வவலியுறுத்தி சிஐடியு சார்பில் தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.

அதன்படி,தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுவதாகச் சொல்லி சாம்சங் நிறுவனத்தை கண்டித்து மதுரையில் சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரையில் சிஐடியு மதுரை மாவட்டத் தலைவர் ரா.தெய்வராஜ், மாவட்டச் செயலாளர் ரா.லெனின் ஆகியோர் தலைமையில் பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டபொம்மன் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிஐடியு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024