தமிழகத்திற்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியை தாமதிக்காமல் மத்திய அரசு வழங்க வேண்டும் – ராமதாஸ்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

தமிழக அரசு சொந்த நிதியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

மத்திய அரசு தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் ஓர் அங்கமாக திகழும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 15,000 பேர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும்17,500 பேர் என மொத்தம் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. இந்தத் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றும் இ.ஆ.ப. அதிகாரி ஆர்த்திக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. கல்வித்துறை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் செய்யப்படும் தாமதமும், காட்டப்படும் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25-ம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இன்று வரை வழங்காததுதான் ஊதியம் வழங்கப்பாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்குவதற்கு மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதியே கல்வித்துறை முடங்குவதற்கு காரணமாக அமைந்து விடக்கூடாது. கல்வித்துறைக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு காட்டும் பிடிவாதம் நியாயமானதல்ல.

அதே நேரத்தில் மத்திய அரசின் நிதி வரவில்லை என்பதையே காரணமாகக் காட்டி, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். மத்திய அரசிடமிருந்து நிதி வராவிட்டாலும் கூட, தமிழக அரசு நினைத்திருந்தால் தன்னிடமுள்ள பிற துறைகளுக்கான நிதியை விதிகளுக்கு உட்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்கியிருக்க முடியும். ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.25 கோடியை ஏற்பாடு செய்வது இயலாத ஒன்றல்ல.

ஆனாலும், ஒருங்கிணைந்த கல்வித்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் அவர்களை தவிக்க விட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக, பெரிதுபடுத்தி அரசியல் லாபம் தேடவே தமிழக அரசு முயல்கிறது என்பது உறுதியாகிறது. இந்தத் திட்டத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பலர் மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள். மாதத்தின் இறுதி நாட்களையே கடன் வாங்கிக் கழிக்கும் அவர்களால் மாதத்தின் முதல் நாளில் ஊதியம் வராமல் வாழவே முடியாது. அவர்களின் துயரத்தை மத்திய மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி வராததால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக , தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தொழில் பயிற்றுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இப்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படாததன் மூலம் பள்ளிக்கல்வித் திட்டத்தின் செயல்பாடுகளே முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பணம் இல்லை என்று பள்ளிகளின் செயல்பாடுகள் முடங்கினால் கல்வித்துறையில் அதைவிட பேரவலம் இருக்க முடியாது.

நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டும் முடிவடைந்து விட்ட நிலையில், மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக அரசும் அந்த நிதிக்காக காத்திருக்காமல் சொந்த நிதியில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024