“தி கிங் மேக்கர்” என்ற பெயரில் ஆர்.எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மறைந்த மூத்த அரசியல் தலைவர் மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளர், ஆர்.எம். வீரப்பன் அவர்கள் குறித்த ஆவணப்படம், திரையுலகத்தின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பில், உலகத்தரத்திற்கு இணையாக உருவாகவுள்ளது.

சென்னை,

திராவிட இயக்கங்களின் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆர்.எம். வீரப்பன். திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.எம். வீரப்பன், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர் அருளாளர் ஆர்.எம். வீரப்பன். மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் ஆர்.எம். வீரப்பன். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் 5 முறை தமிழக அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் திரைத்துறையில் 20க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் தெய்வத்தாய், காவல்காரன், நான் ஆணையிட்டால், ரிக்ஷாகாரன், இதயக்கனி மற்றும் ரஜினி நடிப்பில் மூன்றுமுகம், பட்ஷா முதலாக பல ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கியுள்ளார்.

தமிழகத்தின் வரலாற்றில் இடம்பிடித்த ஆளுமையான ஆர் எம் வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவரைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், உலகத்தரத்தில் ஒரு ஆவணப்படம் உருவாகவுள்ளது.

சத்யா மூவிஸ் தங்கராஜ் தயாரிக்கவுள்ள இந்த ஆவணப்படம் இயக்குனர், தயாரிப்பாளர் பதம் வேணு குமார் மேற்பார்வையில் உருவாகிறது. ஏற்கனவே ஆர்.எம் வீரப்பன் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவு பாடல் ஒன்றை சத்யா மூவிஸ் தயாரித்து செப்டம்பர் 9ம் தேதி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள், மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த ஆவணப்படத்தில் பங்கேற்று, ஆர் எம் வீரப்பன் அவர்களுடனான நினைவுகளையும் அவரைப்பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இதன் முதற் கட்டமாக தயாரிப்பாளர் சத்யா மூவிஸ் தங்கராஜ் மற்றும் ஆவணப்படதின் மேற்பார்வையாளர் பதம் வேணு குமார் ஆகியோர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து உரையாடினர். இந்த ஆவணப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா தானும் இந்த ஆவணப்படத்தில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார். இந்த ஆவணப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024