விவசாயிகளின் எதிர்ப்புக்குள்ளாகும் பாஜக வேட்பாளர்கள்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஹரியாணாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் சுனிதா துக்கல், விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்த சம்பவம் இன்று (அக். 2) அரங்கேறியது.

இதனைத்தொடர்ந்து வேட்பாளரின் பாதுகாவலர்கள், குறுக்குப் பாதை வழியாக அவரை அழைத்துச்சென்றனர். எனினும் பின் தொடர்ந்து சென்ற விவசாயிகள், அவரை மடக்கிப் பிடித்து விவசாயிகளின் போராட்டம் உண்மையானது என்பதை ஒப்புக்கொள்ளவைத்தனர்.

இதற்கு முந்தைய நாளில், ஹிசார் தொகுதி வேட்பாளர் கமல் குப்தா பொதுக்கூட்டத்தில் பேசும்போது, விவசாயி ஒருவர் அவர் மீது காலணி எடுத்து வீசிய சம்பவமும் நடந்தது.

தற்போது சுனிதா துக்கலுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஹரியாணாவிலுள்ள பாஜக வேட்பாளர்கள் அடுத்தடுத்து விவசாயிகளின் எதிர்ப்புக்குள்ளாகி வருவது தொடர்கதையாகிறது.

சுனிதா துக்கலுக்கு எதிர்ப்பு

ஹரியாணா சட்டப்பேரவைக்கு வரும் 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜகவும் காங்கிரஸும் 89 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

சட்டப்பேரவைதேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஃபதேஹாபாத் மாவட்டத்திலுள்ள ராதியா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சுனிதா துக்கல், லம்பா பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பாரதிய கிஷான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஷம்பு மற்றும் கானௌரி பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உண்மையான விவசாயிகள் என்பதை சுனிதா ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த பிப்ரவரி மாதம், கானௌரி பகுதியில் பஞ்சாப் விவசாயி ஷுப்கரன் சிங் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து உரிய விசாரணையைத் தொடங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வற்புறுத்தினர்.

விவசாயிகள் சுனிதாவை முற்றுகையிட்டதும், பாதுகாவலர்கள் அவரை குறுக்குப் பாதை வழியாக அழைத்துச்செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களை துரத்திச் சென்ற விவசாயிகள், தானி கிராமத்தில் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

எதிர்க்கட்சியுடன் சேர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் எனக் கூறியதற்காக சுனிதா இதற்கு முன்பு பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருந்தார். செப். 18ஆம் தேதி புத்தன் காலன் கிராமத்தில் நுழைந்த சுனிதாவுக்கு அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். சீட்டு கொடுக்காததால் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறிய எம்.எல்.ஏ. ல‌ஷ்மன் தாஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காலணி வீச்சுக்குள்ளான பாஜக வேட்பாளர்

கடந்த திங்கள் கிழமை (அக். 1) பத்வாளி தனி கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஹிசார் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கமல் குப்தா பேசினார். இதில் அவர் பேசும்போது, அவர் மீது காலணி வீசப்பட்டது. எனினும் அவர் தனது உரையை முடிக்காமல் தொடர்ந்தார். அங்கு சூழ்ந்திருந்தவர்கள் காலணி வீசியவரைப் பிடித்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் எதிர்க்கட்சிகளின் சதி என்றும், இதன்மூலம் தான் மேலும் பிரபலமாகியுள்ளதாகவும் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024