தமிழிசை Vs திருமாவளவன் வார்த்தைப் போர் – பாஜகவும் விசிகவும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

தமிழிசை Vs திருமாவளவன் வார்த்தைப் போர் – பாஜகவும் விசிகவும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தல்

சென்னை: பாஜக மூத்த தலைவர் தமிழிசை, விசிக தலைவர் திருமாவளவன் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து முன்வைத்த கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என இரண்டு கட்சிகளும் மாறி மாறி வலியுறுத்தியுள்ளன.

மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவுநாளையொட்டி, சென்னை – கிண்டிக்கு சென்ற விசிக தலைவர் திருமாவளவன், காந்தி மண்டபத்துக்கு செல்லாமல் காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்திவிட்டுப் புறப்பட்டார். இந்நிகழ்வு சர்ச்சையான நிலையில், “9.30 மணிக்கு காந்தி மண்டபம் சென்றபோது, ஆளுநர் 10.30 மணிக்கு மரியாதை செலுத்திய பின்னர் தான் மற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்தனர். மாநாட்டுக்காக உளுந்தூர்பேட்டைக்குச் செல்ல வேண்டுமென்பதால் காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டுச் சென்றோம்,” என விளக்கம் அளித்திருந்தார் திருமாவளவன்.

இதற்கிடையே, “மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மட்டும் மரியாதை செலுத்தி உள்ளார். மது ஒழிப்பை வலியுறுத்த முடியவில்லையே என்ற குற்ற உணர்வு காரணமா என்பது தெரியவில்லை” என்பன உள்ளிட்ட விமர்சனங்களை பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை முன்வைத்திருந்தார். அதேபோல் விசிகவின் மாநாட்டில் திருமாவளவன் பேசும்போது, “நேரமின்மை காரணமாக காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்த முடியாததால் காந்தியின் கொள்கைக்கு நான் எதிரானவன், அதாவது நாள்தோறும் மது அருந்துவேன் என்று முன்னாள் தமிழிசை சொல்வதாகத் தெரிகிறது. அவர் குடிக்க மாட்டார் என நம்புகிறேன். அவரைப் போல் எனக்கும் அந்தப் பழக்கம் கிடையாது,” என தெரிவித்திருந்தார். இவ்வாறு தலைவர்கள் தெரிவித்த இரு கருத்துகளும் சர்ச்சையாகியுள்ளன. இதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, இருதரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்: “பட்டியலின மக்களை பல ஆண்டுகளாக ஏமாற்றி விசிக பெயரால் அரசியல் செய்து தமிழினத்தை திருமாவளவன் தலை குனிய வைத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பெண்கள் வளர்ச்சிக்கு ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்து அவருக்கு குடிக்கிற பழக்கம் இருக்காது என்று கூறியதற்கு திருமாவளவன் வெட்கப்பட வேண்டும். அவமானப்படுத்தியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசின் பெண்கள் நல அமைப்பு முழுமையாக விசாரணை செய்து, சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்: “தன்னியல்பான நிகழ்வை அருவருப்பான முறையில் திரித்து கொச்சைப்படுத்தி, தனிப்பட்ட முறையில் கூச்சமின்றி தமிழிசை அவதூறு பரப்பி இருக்கிறார். எளிய மக்களுக்காய் தூய்மையாக பாடாற்றி வரும் திருமாவளவனை கொச்சைப்படுத்திய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்புக் கேட்க வேண்டும். உண்மையில், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவின் கொள்கை வாரிசாக இருக்கும் பாஜகவினர் தான் காந்திக்கு மாலை அணிவிக்க கூச்சப்பட வேண்டும். திருமாவளவன் குறித்த அவதூறு கருத்தை அவர் திரும்பப் பெற்றுக் கொள்வது குறைந்தபட்ச அரசியல் நாகரிகம்,” என்று தெரிவித்துள்ளார்.

– செ.ஆனந்த விநாயகம் / துரை விஜயராஜ்

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024