Tuesday, October 22, 2024

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர் சரிவு!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய (அக். 3) வணிக நேர முடிவில் 14 காசுகள் சரிந்து 83.96 ஆக நிலைப்பெற்றது.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தின் எதிரொலியாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்த வாரம் முழுக்க பங்குச்சந்தை சரிந்தே காணப்படுகிறது.

பழிவாங்கும் நோக்கத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு (அக். 1) ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் களமிறங்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

போர்ப் பதற்றத்தால் தொடர் சரிவு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றம், இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ளது. கடந்த இரு மாதங்களில் இல்லாத வகையில் 2 சதவீதத்திற்கும் மேலாக பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்துள்ளன.

2024ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய 3வது சரிவு இதுவாகும். இதுவரை, இந்த ஆண்டில் மட்டும் 7 முறை, ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இன்று 2% வரை (1,769 புள்ளிகள்) சென்செக்ஸ் சரிந்ததால், முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 2 மாதங்களில் மிகப்பெரிய வீழ்ச்சி! சென்செக்ஸ், நிஃப்டி 2% சரிவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு

இதனிடையே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று 14 காசுகள் சரிந்து 83.96ஆக நிலைப்பெற்றது. வணிக நேரத் தொடக்கத்தில் 83.91 காசுகளாக இருந்த ரூபாய் மதிப்பு, பிற்பகலில் அதிகபட்சமாக 83.97 காசுகள் வரை சரிந்தது. போர்ப் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலையும் ஏற்றம் கண்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அமெரிக்கப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பதும் இந்திய ரூபாய் மதிப்பு குறைவதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. சீன சந்தையின் எழுச்சியும் ரூபாய் மதிப்பு சரிவதற்கான காரணமாக கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

You may also like

© RajTamil Network – 2024