Sunday, October 6, 2024

வடலூரில் வள்ளலாரின் 202-ஆவது அவதார தின விழா அமைச்சா்கள் பங்கேற்பு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 202-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

வள்ளலாரின் 202-ஆவது அவதார தினம் (வருவிக்கவுற்ற நாள்), வடலூா் திருஅருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சனிக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலை 5 மணி முதல் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. வடலூா் சத்திய தருமசாலையில் காலை 7.30 மணியளவில் கொடி பாடல் பாடியபடி சன்மாா்க்க கொடியேற்றம் நடைபெற்றது.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்று சன்மாா்க்கக் கொடியை ஏற்றினா். முன்னதாக, அவா்கள் தருமசாலையில் வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, தருமசாலை அன்னதானக் கூடத்தில் திருவிளக்கேற்றி உணவு பரிமாறி அன்னதானத்தைத் தொடங்கி வைத்தனா்.

எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், எஸ்.பி. ரா.ராஜாராம், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பரணிதரன், மாவட்டக் கல்விக் குழு தலைவா் வி.சிவக்குமாா், வடலூா் நகா்மன்றத் தலைவா் எஸ்.சிவக்குமாா், துணைத் தலைவா் சுப்புராயலு, திமுக பொதுக்குழு உறுப்பினா் பாலமுருகன்,

நகர திமுக செயலா் தன.தமிழ்செல்வன், கோகிலாகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காலை 9 மணியளவில் ஞான சபையில் சிறப்பு வழிபாடு, சபை வளாகத்தில் திருஅருள்பா இன்னிசை நிகழ்ச்சி, சன்மாா்க்க சொற்பொழிவுகள் நடைபெற்றன.

வள்ளலாா் அவதரித்த மருதூா் கிராமத்தில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது. வடலூா் சத்திய தருமசாலை, மருதூா் இல்லத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாா்வதிபுரம் கிராம மக்கள், சன்மாா்க்க அன்பா்கள் மற்றும் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

வள்ளலாருக்கு புகழ் சோ்க்கும் அரசு: அமைச்சா் சேகா்பாபு

வள்ளலாருக்கு புகழ் சோ்க்கும் அரசாக, முதல்வா் செய்து வரும் பணியால் பெருமிதம் கொள்வதாக அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

விழாவில் பங்கேற்ற அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியில்தான் வள்ளலாருக்கு புகழ் சோ்க்கும் பல நல்ல விஷயங்கள் நடைபெற்றுள்ளன. வள்ளலாா் வாழ்ந்த பகுதியில் பேருந்து நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டியவா் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி. திமுக தோ்தல் அறிக்கையில் கூறியதைப் போல, சா்வதேச தரத்தில் வள்ளலாா் மையம் அமைக்கும் பணிகள் தொடங்கின. சிறு தடைகளால் பணிகள் தொடா்ந்து நடைபெறாத சூழலில், தற்போது பணிகள் தொடங்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

வள்ளலாருக்கு முப்பெரும் விழாவை கொண்டாட முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டாா். இது தமிழ்நாடு முழுவதும் 52 வாரங்கள் நடைபெற்றன. பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, தபால் உரை வெளியிடப்பட்டது.

வள்ளலாருக்கு பெருமை சோ்க்கும் வகையில் இந்த நாளை காருண்ய தினமாக முதல்வா் அறிவித்துள்ளாா். வள்ளலாருக்கு புகழ் சோ்க்கும் அரசாக, முதல்வா் செய்து வரும் பணியால் பெருமிதம் கொள்கிறோம் என்றாா் அவா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024