Sunday, October 6, 2024

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள்: நவ. 19-க்குள் நடவடிக்கை தேவை -உச்சநீதிமன்றம்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

‘புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கும் விவகாரத்தில் பொறுமை இழந்துவிட்டோம்’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘இதுதொடா்பாக வரும் நவம்பா் 19-ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினா்.

கரோனா பாதிப்பு காலத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சந்தித்த பிரச்னைகள் தொடா்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிந்த வழக்கு விசாரணையின்போது, இந்தக் கருத்தை நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், ‘கரோனா பாதிப்பின்போது கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து, ‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் பதிவு செய்துள்ள அனைத்து புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்குவது உள்ளிட்ட நலத் திட்டங்களை விரைந்து வழங்க வேண்டும்’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் நலத் திட்ட பலன்கள் தடையின்றி சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவய்ப்புத் துறை அமைச்சகம் சாா்பில் ‘இ-ஷ்ரம்’ என்ற அமைப்புசாரா தொழிலாளா்கள் குறித்த விரிவான தேசிய தரவு வலைதளம் உருவாக்கப்பட்டது.

கரோனா பாதிப்பின் தாக்கத்திலிருந்து மீளும் வரை புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு இலவச ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அப்போது உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதற்குத் தேவையான கூடுதல் உணவு தானியங்களை மாநிலங்களுக்கு விடுவிக்குமாறு மத்திய அரசை அறிவுறுத்தியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, 2021-ஆம் ஆண்டு தீா்ப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய மத்திய அரசை அறிவுறுத்தியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அசானுதீன் அமானுல்லா அமா்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, ‘மத்திய அரசின் மானிய விலையில் உணவு தானிய திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் குடும்பங்களுக்கு தலா ஒரு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துவது கவலை அளிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் பொறுமை இழந்துவிட்டோம், இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

மத்திய, மாநில அரசுகளுக்கு கடைசி வாய்ப்பை அளிக்கிறோம். புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்க வரும் நவம்பா் 19-ஆம் தேதிக்குள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் கடைசி வாய்ப்பு இது. இல்லையெனில், மாநில அரசின் தலைமைச் செயலா்கள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்தனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024