Monday, October 14, 2024

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

திருவனந்தபுரம்,

கேரள திரையுலகில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விசாரித்த ஹேமா கமிட்டி அறிக்கையில் சில பகுதிகளை கேரள அரசு வெளியிட்டது. இந்நிலையில், கேரள ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை கடந்த ஆகஸ்டு இறுதியில் வெளியிடப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு கூறியதன்படி, அதனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் கேரள அரசு ஒப்படைத்து உள்ளது.

ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இளம் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், மூத்த நடிகர் சித்திக்கிற்கு எதிராக கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள மியூசியம் போலீசார் கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி வழக்கு பதிவு செய்தனர். பாலியல் பலாத்காரம் மற்றும் குற்ற நோக்குடன் அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவானது.

2019-ம் ஆண்டிலும் அந்த நடிகை பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசினார். ஆனால், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பின்னர் புதிய மீடூ சர்ச்சை மலையாள திரையுலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த சூழலில், அந்த நடிகை போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் நடிகர் சித்திக் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

சித்திக்கிற்கு இந்த குற்ற செயலுடன் தொடர்பு உள்ளது என்பதற்கான முதல்கட்ட சான்று தெளிவாக உள்ளது என கூறிய கோர்ட்டு, அவரை விசாரணைக்காக காவலில் வைப்பது தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்தது.

இந்த வழக்கில் சித்திக்கிற்கு எதிராக கேரள போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்தனர். இதனால், போலீசார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்த சூழலில், ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஒரு பொய்யான மற்றும் போலி வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டு உள்ளேன் என சித்திக் தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் பெலா எம். திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சித்திக் கைது செய்யப்படுவதில் இருந்து அவருக்கு இடைக்கால பாதுகாப்பு அளித்து கடந்த செப்டம்பர் 30-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனால், சித்திக்கை போலீசார் கைது செய்வதில் தடை ஏற்பட்டது.

65 வயதுடைய நான், சாட்சிகளை அச்சுறுத்துவேன் அல்லது சான்றுகளை கலைத்து விடுவேன் என கூறி கைது செய்வதில் எந்தவித அடிப்படையும் இல்லை. முன்ஜாமீன் வழங்கினால், கோர்ட்டு கூறும் அனைத்து நிபந்தனைகளுக்கும், விதிகளுக்கும் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு அவரை கைது செய்வதில் இருந்து பாதுகாக்கும் வகையில் இடைக்கால தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு, சித்திக்கிடம் இன்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. சித்திக் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 376 (கற்பழிப்பு) மற்றும் 506 (குற்ற உள்நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. எனினும், 2019-ம் ஆண்டு முதல் பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் நடிகை தன்னை துன்புறுத்தி வருகிறார் என சித்திக் கூறுகிறார்.

கேரளாவில் பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய வழக்கில், ஏற்கனவே நடிகர்கள் முகேஷ், இடவேள பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் முன்ஜாமீன் பெற்றதன் அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024