வெற்றி பெற்றார் வினேஷ் போகத்!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.

ஹரியாணாவில் 90 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக். 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி இன்று(அக்.8) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவரை எதிா்த்து ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் மல்யுத்த வீராங்கனை கவிதா ராணி, ஆளும் பாஜக சாா்பில் விமானப் படையின் முன்னாள் கமாண்டர் யோகேஷ் குமார் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது முன்னிலை வகித்து வந்த வினேஷ் போகத், இடையே சற்று பின்னடைவைச் சந்தித்தார்.

பின்னர் மீண்டும் முன்னிலை பெற்ற அவர், இறுதிச் சுற்று முடிவில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் யோகேஷ் குமாரைவிட 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வினேஷ் போகத் 65,080 வாக்குகளும், யோகேஷ் குமார் 59, 065 வாக்குகளும் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் சுரேந்தர் 10,158 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஆம் ஆத்மியின் கவிதா ராணி 1,280 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

இதையும் படிக்க | ஹரியாணா தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏன்? தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி, ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 36 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

வினேஷ் போகத்தின் வெற்றிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

देश की बेटी विनेश फोगाट को जीत की बहुत बहुत बधाई।
यह लड़ाई सिर्फ़ एक जुलाना सीट की नहीं थी, सिर्फ़ 3-4 और प्रत्याशियों के साथ नहीं थी, सिर्फ़ पार्टियों की लड़ाई नहीं थी।
यह लड़ाई देश की सबसे मज़बूत दमनकारी शक्तियों के ख़िलाफ़ थी। और विनेश इसमें विजेता रही।#VineshPhogat… pic.twitter.com/dGR5m2K2ao

— Bajrang Punia (@BajrangPunia) October 8, 2024

வினேஷ் போகத்

பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆனால், கடைசி நிமிடத்தில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக ஒலிம்பிக் அமைப்பு அறிவித்தது. இறுதிச் சுற்று வரை முன்னேறியதால், அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை வழங்க வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல் எழுந்தது.

இருப்பினும், ஒலிம்பிக் சங்கம் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. பிறகு ஓய்வை அறிவித்த வினேஷ் போகத் ரயில்வே பணியை ராஜிநாமா செய்தார். பின்னர், செப்.6இல் காங்கிரஸில் இணைந்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024