Monday, October 21, 2024

மெரினா சாகச நிகழ்ச்சியில் மட்டுமா? விமானப் படை அணிவகுப்பிலும் அதே நிலைதான்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

தாம்பரம்: சென்னை மெரினா கடற்கரையில், விமானப் படையின் சாகச நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து தாம்பரத்தில் இன்று நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்வின்போது 3 வீரர்கள் மயங்கி விழுந்தனர்.

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டுவிழவை முன்னிட்டு தாம்பரத்தில் உள்ள விமானப் படை நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த விமானப் படை வீரர்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்ததையும், அவர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச் செல்லப்படும் காட்சிகளும் ஏஎன்ஐ வெளியிட்ட விடியோவில் பதிவாகியிருக்கிறது.

#WATCH | Chennai, Tamil Nadu | Indian Air Force celebrates its 92nd anniversary at Tambaram Air Force Station.
(Source: Indian Air Force) pic.twitter.com/bbfG18ZmkM

— ANI (@ANI) October 8, 2024

மேலும், தாம்பரத்தில் நடந்த விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வின்போது 3 வீரர்கள் மயங்கி விழுந்தனர் என்று தகவல்களும் தெரிவிக்கின்றன. மயங்கி விழுந்த வீரர்களுக்கு உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட இந்திய விமானப் படையின் விமான சாகசத்தைக் காண வந்த 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இவர்களில் 5 பேர் அதிகப்படியான வெயில் காரணமாக வெப்ப வாதம் மற்றும் நீர்ச்சத்துக் குறைந்ததால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகப்படியான வெப்பம் வாட்டியதே இதற்குக் காரணமாகவும் கூறப்பட்டது. மேலும், 93 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர் என்றும் தற்போது மருத்துவமனைகளில் 7 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. பதட்டமும் பதற்றமும், ஆறும் ஆர்-ம்! பிழையற்ற தமிழ் அறிவோம்! – 4

இது தமிழகம் முழுவதும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. எதிர்க்கட்சிகள் முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரை அனைவரும் இந்த சம்பவத்துக்கு தங்களது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

எதிர்பார்த்ததைவிடவும் அதிகப்படியான மக்கள் கூடியதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், வந்த மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்ய அரசு தவறிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், விமானப் படை வீரர்களும், அணிவகுப்பின்போது மயங்கி விழுந்திருப்பது செய்தியாகியிருக்கிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024