போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் கைது!

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வருகை தரவிருந்த நிலையில், தொழிலாளர்களின் போராட்டத்தை கலைத்து வலுகட்டாயமாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டப் பந்தல் அகற்றம்

கடந்த ஒரு மாதமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், சாம்சங் தொழிற்சாலை அருகே தனியாரின் நிலத்தின் உரிமையாளருடன் அனுமதியுடன் அமைக்கப்பட்டிருந்த போராட்டப் பந்தலையும் இரவோடு இரவாக காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.

இதனிடையே, நேற்றிரவு தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவை சிஐடியு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சடலமாக மீட்பு!

தொழிலாளர்கள் கைது

இந்த நிலையில், இன்று காலை போராட்டக் களத்தில் கூடிய சாம்சங் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அங்கு குவிக்கப்பட்டிருந்த காவலர்கள், போராட்டத்தை கைவிடுமாறு வைத்த கோரிக்கையை தொழிலாளர்கள் ஏற்க மறுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த சிஐடியு மாநிலத் தலைவர் செளந்தரராஜனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிஐடியு மாநிலத் தலைவர் செளந்தரராஜன் கைது

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவன தொழிலாளா்கள் கடந்த நான்கு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அமைச்சா்கள் டி.ஆா்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்தாா்.

இந்தக் குழுவினா் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

திமுக கூட்டணித் தலைவர்கள் ஆதரவு

இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும், தொழிலாளர்களை இன்று நேரில் சந்தித்து செல்வப்பெருந்தகை, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024